பிரதம செயலாளர் செயலகத்தின் 2022 ஆண்டிற்கான கடமை ஆரம்ப நிகழ்வு

2022 ஆம் ஆண்டின் முதல் வேலை நாள் கடமைகளை ஆரம்பிக்கும் வைபவம் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 2022 ஜனவரி 03 ஆம் திகதி பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்கள் – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தலா 3 அலுவலர்கள் பிரதம செயலாளர் செயலக கொத்தணி அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சார்பில் பிரதம செயலாளர் செயலகத்தின் முன்புறத்தில் காலை 8.45 மணிக்கு கலந்து கொண்டனர்.

பிரதம செயலாளர், வடமாகாணம் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ரி.வரதீஸ்வரன் மாகாணக் கொடியை ஏற்றிவைத்தார் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பங்கேற்பாளர்களது இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் 2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சேவை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் திரு. பி.வாகீசன் அவர்களினால் அரசாங்க சேவை உறுதிமொழிகள் வாசிக்கப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

இதன் பின்னர், பிராந்திய சுகாதார சேவை பணிமனை தொற்று நோயியல் மருத்துவர் திரு .பி. பரணீதரன் அவர்களினால், கோவிட்-19 பெருந்தொற்றின் தற்போதைய நிலைமை மற்றும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களின் பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள் குறித்தும், இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார்.

”நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” என்ற கருப்பொருளில் அமைந்த அரசு கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் தலைமை செயலாளர் தனது உரையினை நிகழ்த்தினார்.