நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம்

வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் கலாநிதி. ஜயந்த அவர்களும் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை 03.01.2021 ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர்.

இக்கள விஜயத்தில் சேனாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் கலாநிதி ரீ.கே. இலங்ககோன், மண் விசேடத்துநர் கலாநிதி. டபிள்யூ.எம்.யூ.கே ரட்னாயக்க, இனவிருத்தி விசேடத்துநர் கலாநிதி பாகிம், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் சி.சிவநேசன் மற்றும் மாகாண விவசாயபணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் அதிகூடிய நெல் விளைச்சல் பெறப்படும் இடங்களும் குறைந்த விளைச்சல் பெறப்படும் இடங்களும் பார்வையிடப்பட்டன. பார்வையிடப்பட்ட வயல் நிலங்களில் இருந்து மண் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டன. நெற்செய்கையில் விவாயிகளின் அனுபவமும், அவர்களால் மேற்கொள்ளப்படும் பயிராக்கவியல் நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

பத்தலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஜயந்த சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில்; மண் மாதிரிகளின் பரிசோதனையின் அடிப்படையில் பசளைப்பிரயோகத்தினை மேற்கொண்டு விளைச்சலை அதிகரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்இ மற்றும் வயல் விளைச்சல் கூடிய இடங்களில்; விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக அடுத்த போகத்தில் பல்வேறு பகுதிகளில் முன்மாதிரிச் செய்கை துண்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொருத்தமான நெல் இனங்களும் பயிராக்கவியல் நடைமுறைகளும் சிபாரிசு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.