யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சுடன் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவம் 17 பெப்ரவரி 2020 அன்று நடைபெற்றது.
நீர்வளம் சார்ந்த மற்றும் ஏனைய உள்ளக மனைக் கைத்தொழில் முயற்சிகளில் மாதர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டமான நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இவ் மாதர் அமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைசர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த இந்த நிகழ்வுக்கு உரித்துடைய பெருந்திரளான மகளிரும் கலந்துகொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய வடமாகாண ஆளுநர் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் பங்கெடுத்து அவர்களை ஊக்குவிக்க எண்ணியிருந்த தனக்கு வாய்ப்பளித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடல் வளங்களும் கடல்நீரேரி வளங்கலும் பெருமளவில் இருக்கின்றன இவற்றை அடித்தளமாகக் கொண்டு சர்வதேச ரீதியில் எங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. இவற்றுக்கு ஏற்றவாறு நல்ல திட்டங்களை கொண்டுவரும்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பணியாற்றவேண்டும் என்றும் தெரிவித்தார்.