நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான வயல்விழா 15 மார்ச் 2019 அன்று வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள், வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இவ்வயல்விழாவில் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையின் பண்ணை முகாமையாளர் அவர்கள் நெற்பயிர்ச் செய்கையில் வீசி விதைப்பு முறையினை விட நாற்றுநடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக் கூடிய மேலான நன்மைகள் தொடர்பாகவும் பங்குபற்றுநர்களிற்கு விளக்கமளித்தார். சாதாரண முறை மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 122 புசல் நெல் கிடைக்கின்றது. நாற்று நடல் இயந்திரத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்டதன் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 142 புசல் நெல் கிடைத்தது என்றும் இரசாயனப் பசளைப் பாவனையைக் குறைப்பதற்காக அசோலா பச்சை உரமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் பண்ணை முகாமையாளர் விளக்கமளித்தார். இம் முறை மூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெற்பயிர் வளர்ந்து வரும் காலத்தில் களைகளின் அளவு குறைவாகக் காணப்பட்டது. இதனால் களைநாசினிகளிற்கு ஏற்படும் செலவும் குறைவடைகின்றது. இம் முறைமூலம் ”BW – 367″  எனும் மூன்றரை மாத நெல் வர்க்க இனம் செய்கை பண்ணப்பட்டது.