நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர்

மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நாம் பணிபுரிய வேண்டும். நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம் வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

வட மாகாண இளைஞர்,யுவதிகளின் தொழிற்கல்வியினை மேட்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மாணவர் மற்றும் இளைஞர் யுவதிகளின் உயர்கல்வி,தொழிற்கல்வி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கையேட்டினை வெளியிடும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் 28 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் உரையாற்றுகையில் கல்வி என்பது சமூக செயல்.அது ஒரு சமூக ஈடுபாடு,சமூக தரிசனம்.கல்வியினால் மட்டுமே நாகரீகம் வளரும். ஆகையினாலேயே இந்த நிகழ்வின் மூலம் கல்விக்கு இன்னோர் புதிய பரிணாமத்தை தந்துள்ளோம். கல்வியின் மூலம் வரலாற்றில் பல நன்மைகளை பதிவிடவேண்டும்.

வட மாகாணத்திற்கான முழு வரவு செலவிலே சுமார் 60 சதவீதம் கல்விக்காக நாம் செலவிடுகின்றோம். பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாமல் தொழில்சார்ந்த துறைகளிலும் மாணவர்கள் முன்னேறவேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்வி ஒரு சேவைக்கான பாதையாக இருக்கவேண்டும் எனவே இந்த முயற்சி அவ்வாறு அமையும் என்று நான் நம்புகின்றேன் என்றும் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் தங்களது தொழிற்கல்வி திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கமாக இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்வியை முடித்த பின்பு மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் தொழிற்கல்வியினை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலான விடயங்கள் இந்த கையேட்டில்அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆளுநர் தலைமையில் குறித்த கையேடு இணையத்திலும் வெளியீடு செய்யப்பட்டது.