தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளிற்கு மேம்படுத்தப்பட்ட விவசாய விரிவாக்கல் சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளின் அபிவிருத்தி நிகழ்வானது கடந்த 23/12/2020 புதன்கிழமை அன்று தண்டுவான் விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு திரு அ. கபிலன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் தண்டுவான் விவசாயபோதனாசிரியர் திரு.சி.சுரேன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன், கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய உதவி விவசாய பணிப்பாளர் திரு.றுவான் பாலசூரிய மற்றும் பாட விதான உத்தியோகத்தர் (பெ.வி.வி) திருமதி.யாமினி சசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஒட்டுசுட்டான் இளைஞர் விவசாய கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பழம்பாசி பழப் பொதியாக்கல் நிறுவனத்தின் உறுப்பினர்களான பெரியகுளம், தண்டுவான் அலைக்கல்லுபோட்டகுளம், பெரிய இத்திமடு, ஒதியமலை மற்றும் பழம்பாசி பிரதேசங்களை சேர்ந்த விவசாயத்தை பிரதானமாக கொண்ட முயற்சியாண்மையாளர்களை பிரதான இலக்கு குழுவாக கொண்டு இவ் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந் நிகழ்வில் பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்பாடுகளும், சிறந்த விவசாய நடைமுறைகள், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத்தக்கவாறு மேம்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கைகால அட்டவணை தயாரிப்பு, மண் பரிசோதனை மற்றும் அதனோடு இணைந்த பிரயோகங்கள், விவசாய ஆராய்ச்சி சேவைகள், விவசாய திணைக்களைத்தின் சேவைகள், நடமாடும் பயிர்சிகிச்சை முகாம் மற்றும் விவசாய உள்ளீடுகள் விநியோகம், பழப்பயிர்கள் மற்றும் மரக்கறிப்பயிர்கள் பராமரிப்பு தொடர்பான செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்களால் கொவிட் -19 தொடர்பான விழிப்புணர்வும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களால் சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழு சம்பந்தமான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தண்டுவான் விவசாய போதனாசிரியர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிற்கு பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பெரிய வெங்காய உண்மை விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது.