தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருதுகள் வழங்கும் விழா-2020

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருதுகள்-2020 வழங்கும் நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அவர்களின் தலைமையில்  27.10.2022 அன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையத்தில் மு.ப 10.00 மணிக்கு விருந்தினர்களின் வருகையுடன் ஆரம்பமாகியது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய உற்பத்தித்திறன் செயலக பணிப்பாளர், வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து உற்பத்தித்திறன் தொடர்பான கீதம் இசைக்கப்பட்டு கிளிஃஇந்துக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து அதிதிகளின் உரைகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 151 நிறுவனங்கள் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளை சுவீகரித்துக் கொண்டன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டம் 5 விருதுகளையும், முல்லைத்தீவு மாவட்டம் 9 விருதுகளையும், யாழ்ப்பாண மாவட்டம் 73 விருதுகளையும், மன்னார் மாவட்டம் 16 விருதுகளையும், வவுனியா மாவட்டம் 3 விருதுகளையும், திருகோணமலை மாவட்டம் 10 விருதுகளையும், மட்டக்களப்பு மாவட்டம் 35 விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் நிகழ்வுகளுக்கிடையில் சிறப்பம்சமாக கிளிஃஇராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் புத்தாக்க நடனம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் விருதினைப் பெற்றுக்கொண்டவர்களை பாராட்டியதுடன் தற்போது விருதினைப் பெற்றவர்கள் அடுத்த நிலை விருதினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் நாட்டின் சூழ்நிலை காரணமாக இந்த இடத்தில் இந்நிகழ்வினை வினைத்திறனாக நடத்துவதும் ஒரு உற்பத்தித்திறன் செயற்பாடு தான் எனவும் கருத்துக்கூறிய அவர் இச்செயற்பாட்டிற்கு கொவிட் காலப்பகுதியில் பல தடைகள் ஏற்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து இனிவரும் காலங்களிலும் உற்பத்தித் திறன் செயற்பாட்டினை சரியாக மேற்கொண்டு அதனை மேம்படுத்த வேண்டும் எனவும் கருத்துக் கூறினார்.

இந்நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகப் பணிப்பாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் விருதுகளினைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் உற்பத்தித்திறன் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அவசியமானது எனவும் மென்மேலும் நிறுவனங்கள் உற்பத்தித்திறன் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறைந்தளவு உள்ளீட்டினைக் கொண்டு கூடியளவு வெளியீட்டினைப் பெற்றுக் கொள்ளுதலே உற்பத்தித்திறன் எனவும் இவ் உற்பத்தித்திறன் என்பது எமக்கான வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் நாம் வினைத்திறனாக செயற்படுகின்றோம் என்பதிலே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இவ் உற்பத்தித்திறன் எண்ணக்கரு தொழில்புரியும் நிறுவனங்களில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைக்கும் அவசியமானது. உற்பத்தித்திறன் அதிகரிக்கையில் மனநிறைவும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.மேலும் விருதுகளினைப் பெற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், விருதுகள் வழங்கியவர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் இவ் உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வானது பி.ப 12.30 மணிக்கு நிறைவு பெற்றது.

இவ் உற்பத்தித்திறன் நிகழ்வில் வடமாகாணத்துக்கென வழங்கிவைக்கப்பட்ட விருதானது 02.11.2022 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் அவர்களால் பிரதிப் பிரதம செயலாளர்கள், நிர்வாகம், நிதி, திட்டமிடல், பொறியியல், ஆளணியும் பயிற்சியும், மாகாண உள்ளக கணக்காய்வாளர், இறைவரித்திணைக்கள ஆணையாளர் ஆகியோர் மற்றும் அச்செயலகங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அனைவரினதும் கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக கிடைத்த வெற்றியின் பரிசு என பாராட்டு தெரிவித்து அனைவரையும் கௌரவித்தார்.