ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் 19 மார்ச் 2021 அன்று மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் அவர்கள் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கமளித்தார்.
அபிவிருத்திப் பிரிவு, உண்மை ஆய்வுப் பிரிவு, சமூக ஊடகப் பிரிவு மற்றும் செய்திப் பிரிவு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் தெரியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அரச திணைக்களங்கள் அவற்றின் தனித்தனியான இணைய பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களின் மேம்படுத்தல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், ஒரு நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறையினர் சரியான தகவல்களை முறையான வழிமுறையூடாக உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியமானதென குறிப்பிட்டார். ஆனால் தற்போது அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரச தொலைக்காட்சி , பத்திரிகைகள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு பட்ட செய்திகள் முன்னுக்கு பின் முரணாக திரிவுபடுத்தி பிரசுரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இரு முக்கிய விடயங்களை அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிக்ககையில் சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் வதந்திச்செய்திகள் விரைவாக பகிரப்படுவதாகவும் அதனால் வெளிமுதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை இலங்கையில் முதலிட தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அடுத்து மிக முக்கியமாக அரச உத்தியோகத்தர்கள் பலர் அவர்களின் திணைக்கள தலைவர்களின் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாகவும் குறித்த ஊடக நிறுவனங்கள் , ஊடக அமைச்சிரினால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லை எனவும் கௌரவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் அரச ஊடகங்களால் கூட பிரசுரிக்கப்படுவதில்லை என பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்த கௌரவ ஊடகத்துறை அமைச்சர் அவர்கள் அவ் விடயம் தொடர்பில் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பததாக தீர்மானித்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் கௌரவ அஞ்சல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்கல , பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளத்தாளரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் , வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ கு. திலீபன் , கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதி , ஆளுநரின் செயலாளர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர் , உதவிச் செயலாளர் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , யாழ்;ப்பாணம் , வவுனியா , மன்னார் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள் , மாகாண திணைக்கள தலைவர்கள் , அரச திணைக்கள தலைவர்கள் , அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.