தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு

மேற்படி மீளாய்வு வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது. குறித்த மீளாய்வில் ஆளுநரின் உதவிச்செயலாளர் , வடமாகாண சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர், தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை நிர்மாணிப்பதற்காக வருடாந்த திட்டத்தில் திறைசேரியினால் அனுமதிக்கப்பட்ட 60 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, 180 மில்லியன் தொகைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதுடன் ஏற்கனவே தனக்கு விசேடமாக கிடைக்கப்பெற்ற வேண்டுகோளின் அடிப்படையில் தான் குறிப்பிட்ட தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதனை சில தரப்பினர் தவறாக புரிந்துகொண்டு ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிழையான கருத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டார்.

மேலும் செப்ரெம்பர் மாத முடிவுக்கு முன்னர் தேவையான அனைத்து ஒதுக்கீடுகளையும் பெற்று செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் 2022 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கௌரவ ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டதுடன் ஆரம்பிக்கும் அபிவிருத்தி திட்டங்களை 2 வருடங்களுக்குள் முடித்து அதனை பயன்பாட்டிற்குரியவாறு செயற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

மேலும் அதிமேதகு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும்; வடமாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக ஓதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.