துளிநீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல்விழா

யாழ் மாவட்டத்திலுள்ள தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் தலைமையில் துளி நீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல் விழாவானது விவசாயி திரு. புஸ்ப்பராஜன் அவர்களின் தோட்டத்தில் அதிக எண்ணிக்கையான விவசாயிகளின் வருகையோடு 16.10.2020 ஆம் திகதி ஆரம்பமாகியது.

மேற்படி வயல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையைச் சார்ந்த உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி.ந.விஜயன், விவசாய வியாபார ஆலோசகர் , மத்திய விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள் , விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் முருங்கைச் செய்கையில் ஆர்வமுடைய பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி வயல் விழாவில் பூங்கனியியலிற்கான பாடவிதான உத்தியோகத்தர் , தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் , விவசாய வியாபார ஆலோசகர் ஆகியோர் உரையாற்றினர். யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்கள் முருங்கையானது காய்த் தேவைக்காக மட்டுமன்றி இலையைப் பெற்றுக்கொள்ளவும் நடுகை செய்யலாம் எனக் கூறினார்.

மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் முருங்கையிலையை பெறுமதி சேர் உணவாக பிட்டுக்கு சேர்ப்பதால் இரத்தச் சோகை போன்ற நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் விதைகள் மூலம் நடுகை செய்யப்பட்ட முருங்கையிலிருந்து அதிகளவு காய்க்கக் கூடிய முருங்கை மரத்தினை தெரிவு செய்து அதன் வெட்டுத்துண்டங்களை நடுகை செய்யும் போது அதிகளவான காய்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். திரு.புஸ்ப்பராஜன் அவர்களை முருங்கைச் செய்கையின் முன்மாதிரி விவசாயியாக வைத்து அவருடைய தோட்டத்திலிருந்து முருங்கைத் தண்டுத்துண்டங்களை விற்பனை செய்து ஏனைய விவசாயிகளையும் முருங்கைச் செய்கையாளராக மாற்றி முருங்கைச் சங்கமொன்றினை உருவாக்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திற்கு பொருத்தமாக முருங்கையிலை இரசம் மிதமான சூட்டுடன் பரிமாறப்பட்டு வயல் விழா இனிதே நிறைவுற்றது.