தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சூரிய சக்தியின் உதவியுடன் இயங்கும் நீர்ப்பாசனத் தொகுதியினைப் பயன்படுத்தி குறைந்த உற்பத்திச் செலவுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைக்கான வயல்விழா 04.04.2019 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வற்றாப்பளையிலுள்ள எஸ்.ஈஸ்வரன் எனும் விவசாயியின் தோட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய பணிப்பாளர் சீ.பெரியசாமி, முல்லைத்தீவு மாவட்ட விவசாயப்பணிப்பாளர் இ.கோகுலதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். முல்லைத்தீவு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர் அ.கவந்தீசன், உலக உணவு நிகழ்ச்சித்திட்ட நிறுவன கொள்கைத்திட்ட அலுவலர் திருமதி.ஜே.காவேரி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய திட்டப்பணிப்பாளர் ஜே.கிருஸாந்தன், உலக தரிசன நிறுவன வலய நிதி முகாமையாளர் பிரசாத் பெல்டானோ மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.திவாகரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழினுட்ப உதவியாளர்கள், முள்ளியவளை விவசாயப் போதனாசிரியர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் என இவ் வயல்விழாவில் 60 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர்.
சூரிய சக்தியின் உதவியுடன் இயங்கும் நீர்ப்பாசனத் தொகுதியின் செயற்பாடு மற்றும் அதன் அனுகூலங்கள் பற்றிய விளக்கத்தினை விவசாயி எஸ்.ஈஸ்வரன் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தார். இந்த நீர்ப்பாசன தொகுதியின் மூலம் 5 ஏக்கர் பரப்பளவிற்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடியதாக இருப்பதாகவும், தனது தோட்டக்காணி 3 ஏக்கர் பரப்பளவை கொண்டதாக இருப்பதால் வேறு விவசாயிகளுக்கு அவர்களது தோட்டத்திற்கு கொண்டு சென்று வாடகைக்கு நீர்ப்பாசனம் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார். வீட்டுக்கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய சக்தி தட்டுக்களுடன் (Solar Panel) ஒப்பிடும் போது நிலை நிறுத்திகளில் (Stand) பொருத்தப்பட்ட சூரிய சக்தி தட்டுகளிலிருந்து கூடிய நேரத்திற்கு மின்சாரத்தை பெற முடியும். இரண்டு சில்லு உழவு இயந்திரப்பெட்டியில் பொருத்தப்பட்டிருப்பதால் இதன் பயன்பாடு ஒரு கிணற்றிற்கு மட்டுப்படுத்தப்படாது வேறு இடத்திலுள்ள கிணற்றிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ் வயல்விழாவின் இறுதியில் பங்குபற்றிய விவசாயிகள் பலரும் இத்தொழில்நுட்பத்தினையும் இதன்மூலம் கிடைத்த பலாபலன்களையும், பெறப்பட்ட நன்மைகளையும் ஏற்றுக்கொண்டதுடன் தாங்களும் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு மானிய விலையில் இந்த சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத்தொகுதியினை வழங்கி வழிகாட்டல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இவ்வயல் விழாவினை முள்ளியவளை விவசாயப் போதனாசிரியர் திரு.எஸ்.ஹரிகரன் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.
இவ் வயல்விழாவுடன் இணைந்த வகையில் உலக தரிசன நிறுவனத்தினர் விவசாயிகளிற்கு நிலக்கடலைச் செய்கைக்காக விதை நிலக்கடலையினை வழங்கி வைத்தனர்.