சர்வதேச முதியோர் வார விழாவானது ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தில்; 01.10.2019 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 07.10.2019 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து 07நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது அரச முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் முதியோர் அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கைதடி அரச முதியோர் இல்ல மூத்தோருக்கான விளையாட்டுப்போட்டி, சமூகத்தில் மூத்தோருக்கு சேவையாற்றுவோர் மற்றும் முதியோருக்கு சேவையாற்றும் நிறுவனங்களை கௌரவித்தல் நிகழ்வு, கண்காட்சி, கலைநிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதி நாளான 2019.10.07ம் திகதி (திங்கட்கிழமை) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஆளுநரின் செயலாளர் திரு சி.சத்தியசீலன், மகளிர் விவகார, சமூகசேவை, கூட்டுறவு மற்றும் தொழில்துறை அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். ஆரம்ப நிகழ்வாக விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றதுடன் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் அன்றைய நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில்; இருந்தும் மூத்தோருக்கு சேவையாற்றிய ஐந்து பேருக்கு ‘முதுசொம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர்களில் சிறந்த சமூக சேவையாளர்களாக இருப்பவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.