“அவர் இறந்தார். பாவத்தை ஒழிக்க ஒரேயொருமுறை இறந்தார்.
இப்போது அவர் வாழ்கிறார்” – உரோ. 6 : 10
மானிட குலத்தை மீட்பதற்காக மனித உருவெடுத்துவந்த இறைமகன் கிறிஸ்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இந்த உன்னதமான நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர்.
“சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தவரானார்” என்ற திருவிவிலிய வாக்கியத்திற்கு அமைய, அடிமைத்தன ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மீட்பு, சமாதானம், சமத்துவம், அன்பு, நட்புறவு என அனைத்தையும் இந்த உலகிற்கு பரிசளிப்பதற்காக அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை சாவை கிறிஸ்து ஏற்றார். ஆனாலும் இறந்த கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சாவின் ஆதிக்கத்திற்கு அந்தம் கொடுத்தார்.
இவ்வாறான மகத்துவம் நிறைந்த நன்னாளில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உயிர்ப்பு விழாவுக்கான தயார்படுத்தலான தவக்காலத்தின் 40 நாட்களும், கிறிஸ்தவ மக்கள் ஒறுத்தல் முயற்சிகளிலும், நற்காரியங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்நாட்டை, பிரஜைகளாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் மீட்டெடுத்துவரும் மகிழ்ச்சிகரமான வேளையிலேயே இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறோம். நாட்டின் கடன் நெருக்கடிகள் நீங்கி மக்களுக்கு சுபிட்சமும் சமாதானமும் நிறைந்த நல்வாழ்வை உயிர்த்த கிறிஸ்து வழங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
நாட்டை உலுக்கிய ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் இந்த வேளையில் நினைவு கூறுகின்றேன். அவர்களின் பிரிவின் நிமித்தம் வாடுவோருக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் தேற்றுகை கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். அனைவர் மனங்களிலும் அமைதியும், மகிழ்வும் பெறுக இத்தருணத்தில் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகின்றேன்.
திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் ,
கௌரவ ஆளுநர்,
வடக்கு மாகாணம்.