கல்வி இல்லாமல் எதுவுமில்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆலோசனை கூறினார்.
கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர், பாடசாலைக்கு வருவதற்கான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார். அதேபோல பாடசாலைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை, பாதுகாப்பான புகையிரதக் கடவையாக மாற்றியமைக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.
இதன் பின்னர் உரையாற்றிய ஆளுநர், அதிபரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டதுடன், அரசாங்கத்தின் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படும் வீதிகளின் அபிவிருத்திக்குள் குறித்த வீதியை எதிர்காலத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கல்வி அபிவிருத்தி ஊடாகவே கிராமத்தை அபிவிருத்தி செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மாணவர்கள் விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும் கல்வியைக் கற்பதன் மூலமே சாதிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டடத்துக்கான நிதியுதவி, கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் மற்றும் திருமதி ஆனந்தி சர்வேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.