கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்

புனர்வாழ்வு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின், “சுபிட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான அமர்வு வவுனியா மாவட்ட அரச அதிபரின் வரவேற்புரையுடன் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இவ் அமர்வில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அளுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் . சார்ள்ஸ் , பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் , கௌரவ கு. திலீபன் , கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் , பிரதம செயலாளர் , ஆளுநரின் செயலாளர் , ஆளுநரின் இணைப்பு செயலாளர் , அமைச்சுகளின் செயலாளர்கள் , மாவட்ட அரசாங்க அதிபர்கள் . திட்டமிடல் பணிப்பாளர்கள் , கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள் , துறைசார் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
துறை ரீதியாக இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டபோது பதிலளித்த கௌரவ ஆளுநர் அவர்கள் குறித்த பிரச்சனை தொடர்வதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு இது ஒரு சிறிய பிரச்சனையாக இருக்குமெனவும், மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையெனவும் தெரிவித்தார். எனவே குறித்த திணைக்களத்தினர் வர்த்தமானி பத்திர நிபந்தனைகளுக்கு அமைய மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து மீளவும் குறித்த இடங்களுக்கு விஜயம் செய்து வனஜீவராசிகள் திணைக்களங்களுக்குரிய இடங்களை அடையாளப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் பதிலளித்த கௌரவ விவசாய அமைச்சர் அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி குறித்த இடங்களுக்கு உரிய திணைக்கள தலைவர்களுடன் விஜயம் மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார்.
அத்துடன் யானை பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு உரிய மாவட்ட செயலாளர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் மேலும் வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களுக்கான விவசாய துறைக்காக 3.3 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மேலும் விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபா வரை 4மூ வட்டிவீதத்திற்கு வழங்க உள்ளதாகவும் கௌரவ விவசாய அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மாகாண விவசாய பணிமனையை மாங்குளத்திற்கு மாற்றுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய இரு களஞ்சியசாலைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் வவுனியா , முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட விவசாய திணைக்களங்களில் ஓய்வு பெற்றவர்களையே மீளவும் சேவைக்கு அமர்த்தியுள்ளதாகவும் அவர்களை இனிவரும் காலங்களில் வினைத்திறனாக கொண்டுசெல்வது கடினமெனவும் கௌரவ அமைச்சரின் கவனத்திற்கு கௌரவ ஆளுநரால் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் போதுமான அளவு விதைகள் கையிருப்பில் இல்லையெனவும் அவற்றை மேலும் அதிகப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தினார். மேலும் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் , அவற்றை கண்காணித்தல் போன்ற செயற்பாடுகள் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் வடமாகாணத்தில் உள்ள தங்குமிட விடுதிகளுடைய தரத்தினை உயரத்;துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய ஆலோசனையையும் வழங்கினார்.