கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் சிந்தனையில் உருவான திட்டமான “ஒரு வங்கி ஒரு கிராமம்” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருவையாறு மேற்கு கிராமத்தில் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதி விவசாய பணிப்பாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிராந்திய அதிகாரிகள், தேசிய சேமிப்பு வங்கியின் பிராந்திய முகாமையாளர், கரைச்சி பிரதேச செயலாளர்,விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பயனாளிகளுக்கான மூலதன நிதிக்கான காசோலை மற்றும் மரக்கன்றுகளை வழங்கிவைத்து உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், யுத்தத்தினால் பெருமளவு பாதிப்பினை எதிர்நோக்கிய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மக்களின் தேவையை உணர்ந்து குறித்த “ஒரு வங்கி ஒரு கிராமம்” நிகழ்ச்சித் திட்டத்தினை பொறுப்போடு எடுத்து, முதலாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுத்த அரச அதிபர் அவர்களுக்கு தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிமேதகு ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களை போன்று வங்கிகளிலுள்ள நிதியை மக்களுக்கு குறைந்த வட்டிவீதத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கவேண்டும், என்பதற்கமைய இத்திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை சீரமைப்பதற்கான கடப்பாடு அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.
வடமாகாணத்தில் பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பெரும் கடனை ஆடம்பர தேவைக்கு பயன்படுத்துவதனால் கடனை திரும்ப செலுத்துவதில்லை. இதனாலேயே வங்கிகளுக்கு மக்கள் மேலுள்ள நம்பிக்கையின்மை அதிகரித்து செல்கிறது, இது தொடர்பில் உரிய தொழில்நுட்ப, பொருளாதார, சந்தைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு ஏற்படும் இடர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுவதோடு இத்திட்டத்தில் புதிய விடயங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டுமெனவும் மக்களுக்கு ஏற்படும் இடர்களை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுவதோடு இத்திட்டத்தில் புதிய விடயங்களையும் உள்வாங்கி செயற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். அத்துடன் இத்திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கிடையே ஒரு போட்டித்தன்மையை ஏற்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் வருட இறுதியில் அரச அதிபரின் சிபாரிசுடன் அறிக்கை சமர்ப்பிக்கவும் இங்கு மக்களினதும் வங்கியினதும் அர்ப்பணிப்பான சேவை முக்கியமானதெனவும் வலியுறுத்தினார்.
மேலும், மாகாணசபை முறையில் தேவையான ஆளணிகள் நியமிக்கபட்டு பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுவான இடமாற்ற கொள்கைகள் வகுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததோடு மக்களுக்கான சேவைகள் பரந்துபட்ட நோக்கில் சென்றடைய வேண்டுமென்ற அடிப்படையில் மாகாண விவசாய அமைச்சின் தலைமையகத்தை மாங்குளத்திற்கும் மாகாண காணி அமைச்சின் தலைமையகத்தை கிளிநொச்சிக்கும் நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளதை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இலங்கையில் மட்டுமே இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன வழங்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள அரச திணைக்களங்களில் உற்பத்தி எனும் செயற்பாடு நடைபெறுவதில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய சுமையை எதிர்நோக்குவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், மற்றைய அபிவிருத்தி அடைந்த நாடுகளை போன்று மக்கள் தமக்கு தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்யக்கூடிய நிலையை உருவாக்க வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், தற்போது சகல வசதிவாய்ப்புகள் காணப்பட்டாலும் பெற்றோர் தமது பிள்ளைகளை சரியாக கண்காணிப்பதில்லை என்பதனை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள், எமது இளைய சமுதாயம் பொறுப்புள்ள, பெறுமதிமிக்க, வலுவுள்ள சமுதாயமாக உருவாக பெற்றோர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அரச உத்தியோகத்தர்களிடமும் மற்றும் நிகழ்வில் பங்குகொண்டிருந்த மக்களிடமும் எடுத்துரைத்தார்.