ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடர் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டத் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (31/07/2024) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.
12 நாடுகளைச் சேர்ந்த 514 வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இன்று ஆரம்பமாகியுள்ள ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடரின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளன. 33 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் நடைபெறுவதுடன், சர்வதேச வீரர்களுக்கான பிரிவும் இம்முறை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினருக்கான உரையை நிகழ்த்திய கௌரவ ஆளுநர் அவர்கள்,“ உலகில் எந்த நாட்டில் வசிக்கின்ற போதிலும், சொந்த மண்ணை என்றும் மறவாதவர்களாக உலக தமிழ் பூப்பந்தாட்டப் பேரவையின் உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். தமது மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அந்நியர்களின் மண்ணில் பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறான உதவிகளில் ஒன்றே இந்த பூப்பந்தாட்டப் பேரவையின் முயற்சி ஆகும். ஒரு தனி மனித முயற்சியின் பயனாக இன்று உலகளாவிய ரீதியில் இந்த பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரியதே.இந்த பேரவையின் ஸ்தாபகருக்கு வடக்கு மாகாண மக்கள் சார்பில், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் கூறிக்கொள்கின்றேன். நல்லவற்றை ஏற்று, அவற்றை பாராட்டி கௌரவிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். அதனை அனைவரும் கற்றுக் கொள்ளவும் வேண்டும். இளைய சமூகத்திற்கும் அதனை கற்றுக்கொடுக்க வேண்டும். விளையாட்டை உடல் ரீதியான பயிற்சியாக மாத்திரம் அன்றி, உள ரீதியான பக்குவத்தை ஏற்படுத்தும் விடயமாக அதனை கருத வேண்டும். அத்துடன் தாய்நாட்டிற்காக உதவிகளை புரியும் புலம்பெயர் உறவுகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்” எனதெரிவித்தார்.