எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்

போர் முடிந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், தேசிய உற்பத்திக்கு குறைந்தளவு பங்களிப்புச் செய்கின்ற நிலைமையிலேயே எமது மாகாணம் இருக்கின்றது. அதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  புதன்கிழமை (12.12.2024) காலை, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,
விவசாயம் மற்றும் கடற்றொழில் இரண்டும் வடக்கு மாகாணத்தின் முக்கிய துறைகள். யாழ்ப்பாணத்தில் சில வளங்கள் குறைவாக இருந்தாலும், ஏனைய 4 மாவட்டங்களிலும் எல்லா வளங்களும் இருக்கின்றன. இலங்கை முழுவதுக்கும் விநியோகிக்கக்கூடியளவு தண்ணீரை நாம் மழைகாலங்களில் வீணே கடலுக்குச் செல்ல விட்டுக்கொண்டிருக்கின்றோம். அதைப் பயன்படுத்தக்கூடியவாறு நாங்கள் இன்னும் முன்னேறவில்லை.
வெளிநாடுகளில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் விவசாயிகள்தான். ஆனால் எங்கள் நாட்டில் அவ்வாறு மதிப்பதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவேண்டும். அவர்கள் எல்லோரும் பண்ணையாளர்களாக மாறக்கூடிய நிலைமையை நாங்கள் உருவாக்கிக்கொடுக்கவேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள். இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருள்களாக மாற்றி ஏற்றுமதி செய்யவேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பயிர்வகைகளை இனம்கண்டு நாம் பயிரிடவேண்டும்.
ஏற்று நீர்பாசனத் திட்டங்கள் போரில் அழிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் சிறிய அளவில் தற்போது அவை நடைமுறையாகின்றன. எதிர்காலத்தில் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். ஏற்று நீர்பாசனம் இல்லாமையால் வருமானம் ஈட்டக் கூடிய பயிர்களை விவசாயிகள் நடுகை செய்யாமல் விடும் துர்ப்பார்க்கிய நிலைமை இருக்கின்றது.
விவசாயிகளுடன் நடத்தப்படுகின்ற கூட்டங்களில் அவர்கள் தூநோக்கோடு சில திட்டங்களைச் சொல்கின்றார்கள். ஆனால் எங்களது அலுவலர்கள் அவ்வாறு சிந்திக்கின்றார்கள் இல்லை. அரச அதிகாரிகள் ஒவ்வொருவரும் புத்தாக்க சிந்தனையுடன் செயற்படவேண்டும். வாழ்வாதாரத்தில் பின்தங்கியவர்களை எப்போது மேம்படுத்துகின்றோமோ அப்போதே எமது திணைக்களங்கள் வெற்றியடையமுடியும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இலச்சுமணன் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் (காணி) இ.நளாஜினி, யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி  பேராசிரியர் கந்தையா பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாகாண மட்டத்தில் 17 விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களும், மாவட்ட மட்டத்தில் 15  பண்ணையாளர்களும் 61 விவசாயிகளும் இந்த நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் வடமாகாண விவசாய அமைச்சின் கலாண்டு இதழான ‘அறுவடை’ இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.