ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர்

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச ஊடக உதவி (International Media Support) அமைப்பு யாழ் ஊடக அமையத்துடன் இணைந்து வடமாகாண ஊடகவியலாளர்களுக்காக நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு 05 ஏப்பிரல் 2019 அன்று மாலை யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக எல்லோரும் அறிந்துகொள்ளக் கூடியதான வழிமுறைகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்த ஆளுநர் இந்த செயற்பாடு மக்களுக்கு தகவல் வழங்கும் உரிமையாக (Right to Inform) இருக்கும் எனவும் தெரிவித்தார்.

70களில் வறுமையான மாநிலமாக காணப்பட்ட இந்தியாவின் தமிழ்நாடு , இன்று இந்தியாவின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் இரண்டாவது மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டின் சில ஊடகவியலாளர்களே என்பதனை சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள், போரினால் விழுந்துபோயிருக்கும் தமிழர் தேசத்தினை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இந்த பயிற்சி பட்டறை 2018 செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் கலந்துகொண்ட வடமாகாணத்தைச் சேர்ந்த 40 ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் இதன்போது வழங்கப்பட்டதுடன் இதில் சிறப்பாக செயற்பட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக புதுடில்லி செல்வதற்கான புலமைப்பரிசில்களும் விருதும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சர்வதேச ஊடக உதவி அமைப்பின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, பயிற்றுவிப்பாளர் நாலக குணவர்தன, யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஊடக கற்கைகள் பிரிவின் தலைவருமான கலாநிதி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.