அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு

2019 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதுமாக அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்டு வடக்கு மாகாண சபை அலுவலகங்களில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 361 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 19 ஏப்பிரல் 2021 அன்று மாலை 3.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோக சேவையின் நிரந்தர நியமனங்களில் இணைக்கப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை திட்டங்களுக்கமைய இவ்வாண்டில் பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளுக்காக பல்வேறு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று வழங்கப்படும் இவ் நியமனங்களும் அரசசேவையின் தேவைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் முன்னைய காலங்களை போலன்றி தற்போது அனைத்து வகையான மக்களின் தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் மாகாணசபையின் சேவையினுடைய தேவை அடிப்படையில் முகாமைத்துவ சேவை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிபாரிசிற்கமைய இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விசேட தேவை உள்ளவர்களுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் அண்மைய இடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே சொந்த மாகாணத்தில் சேவையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை பாக்கியமாக கருதி மனநிலையை தயார்படுத்தி வடக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தயாராக வேண்டுமென தெரிவித்தார்.