வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திலுள்ள சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் சந்திப்பு வட மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களான சுதேச வைத்தியத்துறை திணைக்களம், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு திணைக்களம் என்பவற்றுடனும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான திணைக்களங்களும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறித்த சந்திப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றன. குறித்த சந்திப்புக்களின் போது திணைக்களங்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.இதேவேளை குறித்த திணைக்களங்கள் முன்னெடுத்துவரும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த வடக்கு மாகாண ஆளுநர் எல்லோருமே தமக்கான பற்றாக்குறைகள், பிரச்சனைகள் பற்றியே இனி பேசிக்கொண்டிருப்பதைவிட, இருப்பதை பயன்படுத்தி மக்களுக்கு செய்யவேண்டியவற்றை பற்றியும் சிந்திக்குமாறு கூறினார்.
அத்துடன் எல்லோர் மத்தியிலும் சமூக அக்கறை மேம்படுத்தப்படவேண்டும், சுயமாக நம்மை நாமே முன்னேற்ற வேண்டும் என்றும் எங்களால் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை தீர்க்காமல் எப்பொழுதும் மற்றவர்கள் மீது பழி போடுவதிலே காலம் கழிகிறது எனவும் தெரிவித்தார்.
இந் நிலை தொடராமல், இனம்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான தீர்வை விரைவாக இனம்கண்டு மக்களுக்கு உதவ அனைவரும் தன்னுடன் ஒத்துழைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார்.