நாளை மறுதினம் ‘வடக்கின் தங்க குரல்’ இறுதிச்சுற்றுக்கான தெரிவு

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாணத்திலுள்ள இசையார்வலர்களை ஊக்குவிக்கும் முகமாக விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வடக்கின் தங்க குரல் தேடல் 2019 போட்டியின் நான்காம் கட்ட சுற்று எதிர்வரும் சனிக்கிழமை (26) யாழ் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடந்த ஐந்தாம் திகதி இயக்குனர் இமயம் இளையராஜா மற்றும் இயக்குனர் அமீர் அவர்களின் வருகையுடன் யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வில் 15 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்ட நூற்றுக்கணக்கான வடமாகாணத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் முதற்சுற்றுக்காக 130 பேர் தெரிவுசெய்யப்பட்டு இரண்டாம் சுற்று குரல் தேடல் போட்டிக்காக 81 பேர் தெரிவாகினர். மூன்றாம் சுற்றில் 37 இசையார்வலர்கள் போட்டியிட்டு தற்போது நான்காம் சுற்று குரல் தேடல் போட்டிக்காக 20 பேர் நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த 20 போட்டியாளர்களும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வில் போட்டியிட்டு தமது இசைத்திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு 8 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெரிவுசெய்யப்படும் 8 போட்டியாளர்களும் யாழில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு போட்டியிடவுள்ளதுடன் வடக்கின் தங்க குரலிற்கு சொந்தமானவர் யார்? என தெரிவுசெய்யப்படவுள்ளார்.

கடந்த சுற்றுக்களின் போது கௌரவ ஆளுநர் அவர்கள் விஜயம் செய்து போட்டியாளர்களை ஊக்குவித்ததுடன் அவர்களுக்கான சிறந்த களம் அமைத்துக்கொடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இக்குரல் தேடல் போட்டியில் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் போட்டியாளர்களது திறமை அமைப்பாளர்கள் மற்றும் நடுவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குள்ளாக்கியுள்ளதுடன் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறும் இப்போட்டிக்கு பலரின் ஆதரவும் வரவேற்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் மிகவும் எதிர்பார்ப்புடன் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இக்குரல் தேடல் தெரிவு நிகழ்வில் பார்வையாளர்களாக பொதுமக்களும் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

–               வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு