உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணத்தின் சிரேஷ;ட பொலிஸ் மா அதிபருக்கும் ,ஐந்து மாவட்ட அரசாங்கம் அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப்பரீட்சை, ஆகஸ்ட் 31ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. வடமாகாணத்தில் பதினையாயிரத்து இருநூற்று பதின்மூன்று (15,213)  பாடசாலைப் பரீட்சார்த்திகளும், மூவாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு (3,857) தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். வடமாகாணத்தில் இருநூற்று பதினேழு (217) பரீட்சை நிலையங்களில் உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு