வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (29.10.2026) வியாழக்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வுகளைத் துரிதப்படுத்துதல், வருடாந்த இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். அலுவலகக் கடிதங்களுக்குக் குறித்த காலத்தில் பதிலளித்தல், ஒழுக்காற்று விசாரணைகளையும் கணக்காய்வுக் கேள்விகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்தல், வரவு செலவுத் திட்டங்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், அலுவலகங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அரச நிகழ்வுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தவறாது பங்கேற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துமாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.



