துணுக்காய் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் உறுதி.

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேசத்தில் விவசாயிகள் முன்வைத்த குளப் புனரமைப்பு, அணைக்கட்டு உயர்த்துதல் மற்றும் வாய்க்காலுக்குப் பாலம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஆளுநர் தலைமையில், வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று (22.10.2026) துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களையும் விவசாயச் செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டனர்.

புத்துவெட்டுவான் குளம்

போருக்குப் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்த ஆரம்ப காலத்தில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்ட புத்துவெட்டுவான் குளம் தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், புனரமைக்கப்படாமல் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். குளத்தைப் புனரமைப்பதன் மூலம் கிராமத்திலுள்ள கிணறுகளின் நீர்மட்டத்தையும் பேண முடியும் எனச் சுட்டிக்காட்டினர்.

கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட இக்குளத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புத்துவெட்டுவான் கிராமத்தில் நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவர் முன்னெடுக்கும் விவசாயப் பண்ணையையும் ஆளுநர் பார்வையிட்டார். சியாப் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உபகரணங்கள், மாகாண சபையின் உதவிகள் மற்றும் விவசாயப் போதனாசிரியரின் வழிகாட்டலுடன் இந்தப் பண்ணை முன்னெடுக்கப்படுகிறது. இதே கிராமத்தில் மேலும் 11 பேர் நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைப் பாராட்டிய ஆளுநர், இதனை ஊக்குவிப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜயங்கன்குளத்தின் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

ஜயங்கன்குளத்தின் கீழ் தற்போது சுமார் 900 ஏக்கரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடி உயர்த்தினால், பயிர்ச்செய்கைப் பரப்பை 1,500 ஏக்கர் வரை விரிவுபடுத்த முடியும் என விவசாயிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

குளத்தில் கிரவல் அகழ்வதற்கான அனுமதியை உரிய பொறிமுறையின் ஊடாகப் பெற்றுக்கொள்ளுமாறும், அதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தடையாக இருக்காது என்றும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் குளத்தின் தரைமட்டம் சீரற்ற நிலையில் உள்ளதால், அதனைச் சீரமைத்துத் தருமாறு விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் உறுதியளித்தது.

வாய்க்காலுக்குப் பாலம் அமைக்க அடுத்த ஆண்டு நடவடிக்கை

தேறாங்கண்டல் குளத்தின் வலதுகரை வாய்க்காலைப் பார்வையிட்டபோது, அங்கு பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நீர்ப்பாசனத் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அடுத்த ஆண்டு பாலத்தை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

தேறாங்கண்டல் குளத்தை ஆழப்படுத்துமாறும் விவசாயிகள் கோரினர். எனினும், அதற்கான விஞ்ஞானபூர்வமான சாத்தியப்பாடுகள் குறைவாக உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் விளக்கமளித்தார். அதேவேளை, குளத்தின் அணைக்கட்டை உயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்களப் பயணத்தில் விவசாய மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டப் பிரதம பொறியியலாளர், மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.