வடக்கு மாகாண சபையின் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், 62 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட உயிலங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் தென்னியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (22.10.2026) வியாழக்கிழமை மாணவர்களிடம் கையளித்தார்.
உயிலங்குளம் பாடசாலையில் 28 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் வகுப்பறைகளும் நிர்வாக அலுவலகமும் ஒரே கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், புதிய கட்டடத் தொகுதி மாணவர்களுக்குக் கூடுதல் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
தென்னியன்குளம் பாடசாலையில் 34 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தையும், மாணவர்களுக்கான குடிநீர் விநியோக வசதியையும் ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மைதானம் மற்றும் பிரதான மண்டபத்தைப் புனரமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாகாண மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவர்களும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுகளில் உரையாற்றிய ஆளுநர், கிராமப்புறப் பாடசாலைகளின் அபிவிருத்தியில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தாம் முன்னர் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் சில கிராமங்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்க முடியாமல் போன பணிகளை இப்போது நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக ஆளுநர் பதவியைக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
மல்லாவி மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதைய போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இப்பகுதிப் பாடசாலைகளுக்கான வீதிகளைச் சீரமைத்து, மாணவர்களுக்கான மானியப் பேருந்துச் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மாணவர்கள் பாடக் கல்வியுடன் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு அப்பாலும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் ஒவ்வொரு துறையிலும் முதல் 20 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும், வடக்கு மாகாணத்திலிருந்து இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.





