பெரிய வெங்காய அறுவடை விழா – மூங்கிலாறு, முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் கீழ் உடையார்கட்டு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மூங்கிலாறு கிராமத்தில் மத்திய விவசாயத் திணைக்களத்தின் உதவித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய வெங்காய உண்மை விதையிலிருந்து குமிழ்கள் உற்பத்திப் பயிர்ச்செய்கையின் வெற்றிகரமான அறுவடை விழா நிகழ்வானது 30.09.2026 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி த.ஜீவராணி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர்(மறுவயற் பயிர்) திருமதி. சிவகௌரி குணசீலன் பாடவிதான உத்தியோகத்தர் (நெல்) திருமதி ராஜினி முத்துராஜ், பாடவிதான உத்தியோகத்தர் (பூங்கனியியல்) திருமதி கேமா கமலதீபன், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு இ.மயூரன், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்திரந்தனர்.

நிகழ்வின் தலைமை உரையினை வழங்கிய மறுவயற் பாடவிதான உத்தியோகத்தர் தனது உரையில் விவசாயிகள் பெரியவெங்காய செய்கையில் ஆர்வம் காட்ட வேண்டும், ஏனெனில் பெரிய வெங்காயத்தின் கேள்வியானது எமது நாட்டில் அதிகரித்து வருவதுடன் எமக்கு தேவையான வெங்காய பெரும்பகுதி இறக்குமதி மூலமே கிடைக்கின்றது. எனவே எமக்கான தேவையினை நாமே பூர்த்தி செய்யக் கூடியவர்களாக மாறவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான உதவித்திட்டத்தின் மூலம் விவசாயிகளை பயிர்ச் செய்கைக்கு ஊக்கப்படுத்தி வருகின்றோம்.

மேலும் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மை விதையில் இருந்து பெரிய வெங்காய குமிழ் உற்பத்தியினை மேற்கொள்வதற்கு மத்திய விவசாயத் திணைக்களத்தின் திட்டத்தின் ஊடாக 10 பயனாளிகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் உற்பத்தி செய்யும் தரமான குமிழ்களை விவசாயத் திணைக்களமே கொள்வனவு செய்து கொள்ளும் எனவும் தனது உரையில் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் பெரிய வெங்காயச் செய்கையாளரான விவசாயி திரு. சந்திரசேகரம் ஜயா அவர் எமது முல்லைத்தீவ மாவட்டத்தின் ஒரு சிறந்த விவசாயி என பாராட்டியதுடன் அவருடைய கடந்த காலங்களின் பயிர்ச்செய்கையின் மூலம் பெற்ற வெற்றியினையும் விவசாயத் திணைக்களத்துடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தினையும் ஏனைய விவசாயிகளுக்குத் தனது கருத்தின் மூலம் தெரியப்படுத்தினார்.

இறுதியாக பெரிய வெங்காயப் பயிர்ச்செய்கையினை வெற்றிகரமாக மேற்கொண்ட விவசாயி திரு. சந்திரசேகரம் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டபொழுது பெரிய வெங்காய செய்கையில் உள்ள தனது அனுபவரீதியான கற்கையினை ஏனைய விவசாயிகளுக்கும் பகிர்ந்ததுடன் வெங்காய செய்கையின் நாற்றுமேடை பராமரிப்பின் முக்கியத்துவத்தினையும் கூறினார். மேலும் பெரியச் வெங்காயச்செய்கை மேற்கொள்ள விரும்பும் ஏனைய விவசாயிகளுக்கும் தன்னால் இயன்ற உதவியினை வழங்குவேன் என்றும் தெரிவித்ததுடன் பெரிய வெங்காய செய்கையில் உள்ள நன்மைகளையும் இலாபத்தினையும் ஏனைய விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.