முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அறுவடை விழா நிகழ்வு – பெரிய வெங்காயம் குமுழ் உற்பத்தி மற்றும் சின்ன வெங்காய உண்மை விதை

வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் வழிகாட்டலின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் பங்களிப்பில் 2026 ஆண்டு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மற்றும் பெரிய வெங்காய குமிழ் உற்பத்தி தொடர்பிலான அறுவடை விழா நிகழ்வானது 24.09.2026 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் ஒட்டுசுட்டான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலும் காலை 11.30 மணியளவில் கொல்iவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலும் குறித்த விவசாயப்போதனாசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒட்டுசுட்டான் விவசாயப் போதனாசிரியர் செல்வி லோ.மதிவதனி தலைமையில் நடைபெற்ற சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை விழா நிகழ்வில் விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. மேரி ஆன்சலா லக்சன், பாடவிதான உத்தியோகத்தர் (மறுவயற்பயிர்)இ திருமதி சிவகௌரி குணசீலன், பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த பிரதி விவசாயப்பணிப்பாளர்; அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தியின் அவசியம் தொடர்பாகவும், அதனால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் விவசாயிகளிற்கு தெளிவுபடுத்ததியிருந்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உண்மை விதை உற்பத்தியினை அதிகரிப்பதோடு உண்மை விதையை பயன்படுத்தி வெங்காய செய்கையினை மேற்கொள்ள முன்வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.

கொல்லவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொல்லவிளாங்குளம் கிராமத்தில் திருமதி பத்மகுமார் வளர்மதி எனும் விவசாயியினால் செய்கை பண்ணப்பட்ட பெரிய வெங்காய அறுவடை வயல் விழா விவசாயப் போதனாசிரியர் திரு அற்புதலிங்கம் ரஜித் அவர்களின் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்வின் தலைமை அதிதியாக கலந்து சிறப்பித்த உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. மேரி ஆன்சலா லக்சன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக மாவட்டத்தில் அதிகளவு விஸ்தீரணத்தில் பெரிய வெங்காயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் தற்பொழுது குறைவடைந்துள்ளதாகவும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் முன்பிருந்த இலக்கினை நாம் அடைய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் கௌரவ மாந்தை கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு. பிருந்தாபன், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் விவசாயிகள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பயிர்ச்செய்கை தொடர்பான நிலத்தெரிவு, பண்படுத்தல் முறைகள், குமிழ்ப்பரிகரணம், நடுகை முறை, பசளைப்பிரயோகம், செயற்கை முறையிலான மகரந்த சேர்க்கை, நீர்ப்பாசன முறைகள், நோய்இபீடை மற்றும் களைக்கட்டுப்பாடு, அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பங்கள் தொடர்பாகவும் தெளிவான முறையில் விளக்கங்களை வழங்கியிருந்ததுடன் பயிர்ச்செய்கை தொடர்பிலான மேலதிக ஆலோசனைகளை விவசாய போதனாசிரியரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

வெங்காயச்செய்கையில் நீண்டகால அனுபவம் இருந்தும் உண்மை விதை உற்பத்தி இதுவே முதல்முறை என்றும் இதில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அதிலிருந்து பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் இனிவரும் காலங்களில் உண்மை விதை உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயி அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.