அபயம் அறக்கட்டளையால் 2.8 கோடி ரூபா பெறுமதியான சீ-ஆர்ம் இயந்திரம் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த இயந்திரத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ரூபா 42 இலட்சம் வரித் தொகையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்பின் பேரில் வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
அபயம் அறக்கட்டளையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்ட இந்த பெறுமதிமிக்க மருத்துவ உபகரணத்தை முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நிகழ்வில் கலந்துகொண்டு இயந்திரத்தைக் கையளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளாக சீ-ஆர்ம் இயந்திரம் இல்லாத காரணத்தால் எலும்பு முறிவு தொடர்பான சத்திர சிகிச்சைகளைப் பெற வேண்டிய நோயாளிகள் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது இந்த இயந்திரம் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளதன் மூலம், அப்பகுதி மக்கள் தமது சொந்த மாவட்டத்திலேயே குறித்த மருத்துவச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், சீ-ஆர்ம் இயந்திரம் உத்தியோகபூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் எதிர்காலத் தேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இறுதிப் போரின் போது மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைகள் 17 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், மாவட்டத்தின் ஒவ்வொரு தேவையையும் கட்டம்கட்டமாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை நாட்டின் மிகவும் பின்தங்கிய மருத்துவமனைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில், அதன் நிலையை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலேயே மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அபயம் அறக்கட்டளையால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்களைப் பாராட்டிய ஆளுநர், ‘எமது நாட்டில் பிறந்து இங்கு கல்வி கற்றவர்கள் இன்று வெளிநாடுகளில் உழைத்து, தாம் ஈட்டும் வருமானத்தின் ஒரு பகுதியை தமது மண்ணின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வழங்குகின்றார்கள். அவர்களுக்கு வடக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனக் குறிப்பிட்டார்.
சீ-ஆர்ம் இயந்திரம் கிடைத்துள்ளதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குறித்த மருத்துவத் தேவைக்காக இனிமேல் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை குறைவதுடன், தமது மாவட்டத்திலேயே தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தையும் ஒருங்கிணைத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது அவசியம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், 2.8 கோடி ரூபா பெறுமதியான சீ-ஆர்ம் இயந்திரத்தை வழங்கிய அபயம் அறக்கட்டளைக்கும், அதனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்கான ரூபா 42 இலட்சம் வரித் தொகையை மாகாண நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுத்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் நளின் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அபயம் அறக்கட்டளையின் தலைவர் கே.பார்த்தீபன், சீ-ஆர்ம் இயந்திரத்தை கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.யோகநாதன், தொழிலதிபர் மங்களேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ஜெயக்காந்தன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி எஸ்.சுதர்சன், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




