நிலக்கடலை பயிர்ச் செய்கையினை ஊக்குவித்தல் வயல்விழா – பளை

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலக்கடலை செய்கை வயல்விழாவானது விவசாயப் போதனாசிரியர் திருமதி.பூ.சங்கீதா தலைமையில் நீதிராசா கிருஜனா என்பவரின் களத்தில் 29.09.2026 மாலை 02.00 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், கமக்காரஅமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடையே நிலக்கடலைப் பயிர்ச்செய்கை தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், நவீன மற்றும் விஞ்ஞான ரீதியான பயிர்ச் செய்கை முறைகள் தொடர்பான அறிவை வழங்குவதாகும். மேலும் நிலக்கடலையின் உற்பத்தி திறனை அதிகரித்தல் தரமான விளைச்சலைப் பெறுதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் ஆகியன இந் நிகழ்வின் நோக்கங்களாக அமைந்தன.

நிகழ்வின் போது நிலக்கடலைப் பயிரின் வளர்ச்சி நிலை, வயல் பராமரிப்பு முறைகள், களை முகாமைத்துவம் மற்றும் அறுவடை தொடர்பான நடைமுறை விடயங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் விவசாயிகள் தமது வயல்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இத்தகைய வயல் விழாக்கள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதன் மூலம் பிரதேசத்தில் நிலக்கடலைப் பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கும் விவசாயிகளின் உற்பத்திதிறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும், தொடர்ந்து நிலக்கடலைப் பயிர்ச்செய்கையின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் மேம்பட்ட பயிர்ச்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.