நெல் மற்றும் சிறுதானிய விதை சேமிப்பு களஞ்சியம் மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழா – முழங்காவில்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் விவசாயப்போதனாசிரியர் பிரிவில், மத்திய விவசாய அமைச்சின் நிதியீட்டில் அமைக்கப்பட்ட நெல் மற்றும் சிறுதானிய விதை சேமிப்பு களஞ்சியம் மற்றும் விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவானது 29.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00மணிக்கு இடம் பெற்றது.

விவசாயிகளின் தேவைகளைக் கருத்திற் கொண்டு தரமான விதைகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலகுவாகவும் முறையாகவும் வழங்குவதனையே நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.தெ.யோகேஸ்வரன் மேலதிக விவசாயப் பணிப்பாளர் – வடமாகாணம், கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப்பணிப்பாளர் -கிளிநொச்சி, முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர், முழங்காவில் கமநலசேவைத்திணைக்களத் தலைவர் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு நிகழ்வாக முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வு இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் உதவி விவசாயப்பணிப்பாளர்-வடமாகாணம், கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், கமநலசேவைத்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விநாயகர் விவசாயக் கூட்டுறவுச்சங்கம்-முகாமையாளர், கமக்காரஅமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்கள், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் சேதனப்பசளை விற்பனைக் கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் இயற்கைப் பசளைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை இடம் பெற்றது.

விவசாயியின் முயற்சியால் சிறப்பான விவசாயம் வளர்ந்து இந்நிலையம் சிறக்க அனைவரும் இணைந்து ஆதரிப்போம்.