சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் வடக்கு மாகாணம் நாட்டில் முன்னணியில் – ஆளுநர்

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வடக்கு மாகாணம் இன்று நாட்டில் முன்னணி மாகாணமாகத் திகழ்கிறது. இந்த முன்னேற்றம் எந்தவொரு ஓர் அலுவலகத்தின் சாதனையுமல்ல, மாவட்டச் செயலர்கள் முதல் கிராம அலுவலர்கள் வரை திட்டமிடல், சமுர்த்தி, சமூக சேவை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளில் களத்தில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளினதும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பெறுபேறாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண தேசிய சமூகப் பாதுகாப்பு விருது – 2026 நிகழ்வு இன்று (30.09.2026) புதன்கிழமை வவுனியாவில் உள்ள ஹோட்டல் செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றபோது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூகப் பாதுகாப்புத் துறையுடன் தமக்குள்ள தொடர்பு ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னரான ஒன்றல்ல எனக் குறிப்பிட்ட ஆளுநர், தாம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சமூகப் பாதுகாப்புக்கான தேசிய விருதைப் பெற்றிருந்ததாகவும் நினைவுகூர்ந்தார். அப்போது கிடைத்த அந்த விருதை தனிப்பட்ட சாதனையாகக் கருதாமல், தம்முடன் களத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான அரச அலுவலர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதியதாகவும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே துறையின் நிகழ்வொன்றில் ஆளுநராகக் கலந்துகொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அதிகாரிகளைப் பாராட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்புச் சபையின் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வடக்கு மாகாணம் முன்னணி நிலையில் உள்ளதை 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளும் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இந்த முன்னேற்றம் ஓர் அலுவலகத்தின் தனிப்பட்ட செயல்திறனால் உருவானதல்ல எனத் தெரிவித்தார். மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், திட்டமிடல் மற்றும் சமுர்த்தி அதிகாரிகள், சமூக சேவை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளில் பணியாற்றுவோர் முதல் கிராம அலுவலர்கள் வரை அனைவரினதும் தொடர்ச்சியான களப்பணியே இதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் என்பது வெறுமனே ஒரு தொகையைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் அல்ல. அரச ஓய்வூதியம் கிடைக்காத ஒருவரின் முதிய வயதுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மரண நலன், இயலாமை நலன், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான பாதுகாப்பு அமைப்பாகும்’ என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலராகத் தாம் பணியாற்றிய காலத்தையும் நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலகட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது ஆரம்பிக்கப்பட்ட சிறிய முயற்சி இன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணும்போது, ஒரு நிர்வாக முயற்சி எவ்வாறு காலப்போக்கில் மக்களின் வாழ்க்கையில் வேரூன்றும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக மாறுகிறது என்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் களத்தில் பணியாற்றும் அரச அலுவலர்களே உண்மையான முன்னோடிகள் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டச் செயலகங்களிலிருந்து பிரதேச செயலகங்கள் வரை, அங்கிருந்து கிராம அலுவலர் நிலையங்களையும் கடந்து மக்களின் வீட்டு வாசலுக்குச் சென்று அவர்களை சந்தித்து, திட்டம் தொடர்பில் விளக்கமளித்து, அவர்களைப் பயனாளிகளாக இணைத்த அனைத்து அலுவலர்களுக்கும் விசேட பாராட்டைத் தெரிவித்தார்.

தேசிய விருதைப் பெறுகின்ற அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆளுநர், ‘இந்த விருது உங்கள் பணியின் முடிவுக்கான அங்கீகாரம் அல்ல, இன்னும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான பொறுப்பை அதிகரிக்கும் அங்கீகாரம்’ எனக் குறிப்பிட்டார். அவர்களின் பணியைப் பார்த்து இளம் அதிகாரிகள் கற்றுக்கொள்வார்கள் என்றும், அந்தப் பணியின் ஊடாக அரச சேவையின் மீது மக்களுக்கான நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டுகளில் முதியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் முக்கியத்துவமும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ‘இன்று நாம் உருவாக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பே நாளைய தலைமுறையின் அமைதியான வாழ்வுக்கான அடித்தளமாக அமையும்’ எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணம் தற்போது முன்னணியில் இருப்பதைப் பெருமையாகக் கூறுவதுடன் நின்றுவிடாமல், அந்த நிலையைத் தொடர்ந்து பேணுவதோடு மேலும் அதிகமான மக்களை சமூகப் பாதுகாப்பின் வலையமைப்புக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கௌரவ விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டச் செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம அலுவலர்கள், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் அதிகாரிகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வில் பாரம்பரிய மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், சிறப்புரைகள், விருது வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.