ஆளுநர் நா.வேதநாயகனின் முயற்சியால் புலிக்குளத்தில் துருசு அமைக்கும் பணி ஆரம்பம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாக விவசாய பீடத்தின் நீண்டநாள் தேவைக்கு நடைமுறைத் தீர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த விடயம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தெரிவித்தார்.

புலிக்குளத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு துருசு அமைக்கும் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30.09.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு துருசு அமைக்கும் பணியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நீண்டகாலமாகத் தீர்வின்றி இருந்து வந்த புலிக்குளம் தொடர்பான விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வொன்றை ஏற்படுத்தி, அந்த நீரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகப் பீடங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய நிலையை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

துருசு அமைக்கும் பணியை ஆரம்பித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் த.ராஜகோபு, புலிக்குளம் 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும், 2009ஆம் ஆண்டு அது உடைப்பெடுத்ததாகவும் தெரிவித்தார். இக்குளத்துக்கு இதுவரை வான் மற்றும் துருசு அமைக்கப்படாத நிலையில், 2017ஆம் ஆண்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அடுத்தகட்டப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது துருசு அமைக்கப்படுவதன் மூலம் அடுத்தகட்டமாக வாய்க்கால் அமைத்து குளத்து நீரைப் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர், இதன் மூலம் கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களுக்கும், வயல் நிலங்களுக்கும் நீரை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது சுமார் 210 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்டுள்ள இக்குளத்தை மேலும் இரண்டரை அடி உயர்த்தி, அதன் கொள்ளளவை 1013 ஏக்கர் அடியாக அதிகரிப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க பயனைப் பெற முடியும் எனவும், அதற்காக சுமார் 355 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்குத் தேவையான வனவளத் திணைக்கள அனுமதியும் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் புலிக்குளம் தொடர்பான சர்ச்சை நீடித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தம்மையும் அழைத்து, புலிக்குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், புலிக்குளத்தை மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக அபிவிருத்தி செய்தல், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களுக்கு நீரை வழங்குதல் மற்றும் விவசாயிகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இன்று அந்தத் தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாகவும் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் கருத்துத் தெரிவிக்கையில், புலிக்குளம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் திணைக்களங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றி, தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்வதாகக் குறிப்பிட்டதுடன், மாகாணத்தில் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள விவசாய பீடம் முக்கிய வளமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

விவசாய பீடத்துடன் மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாகவும், பீடத்தின் தேவைகளை மாகாண சபை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் அதன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், தாம் 2003ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்தப் பகுதிக்கு வந்திருந்ததாக நினைவுகூர்ந்தார். அக்காலத்தில் இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு வந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

‘அன்று ஒரு முறைப்பாட்டை விசாரிப்பதற்காக வந்த இந்தப் பகுதிக்கு, இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க வந்திருக்கின்றேன்’ எனக் குறிப்பிட்ட ஆளுநர், பல்கலைக்கழகங்கள் தமது கல்விச் செயற்பாடுகளைத் தாண்டி சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அந்த வகையில், கிளிநொச்சி வளாகத்திலுள்ள மூன்று பீடங்களும் வடக்கு மாகாண சபையுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும், அதேபோன்று வவுனியா பல்கலைக்கழகமும் சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வன்னிப் பிரதேசத்தில் பல ஏற்றுநீர்ப்பாசனத் திட்டங்கள் காணப்பட்டதாகவும், போரினால் அவை அழிவடைந்த பின்னர் பல விவசாயிகள் நெற்பயிர்ச்செய்கைக்கு மாறியதாகவும் குறிப்பிட்ட ஆளுநர், நெற்பயிர்ச்செய்கை எப்போதும் அதிக இலாபத்தை வழங்கக்கூடியதாக இல்லாத நிலையில், மாற்றுப் பயிர்ச்செய்கையின் ஊடாக விவசாயிகள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்கமைய, விவசாயிகளின் பயிர்ச்செய்கை முறைமைகளில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், அதிக பெறுமதி கொண்ட பயிர்ச்செய்கை முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

புலிக்குளத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒரு தடையல்ல எனத் தெரிவித்த ஆளுநர், மாகாண சபைக்கு கிடைக்கப்பெறும் நிதி அதன் ஆளணியால் கையாளக்கூடிய அளவை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும், குளத்தின் மேலதிக அபிவிருத்தி சில திணைக்களங்களின் அனுமதிகளில், குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் அனுமதியில் தங்கியிருப்பதாகவும், தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொண்டு விரைவில் கிளிநொச்சி வளாகத்தின் முழுமையான நீர்த் தேவையையும், விவசாயிகளின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் கல்வி மற்றும் நடைமுறைப் பயிற்சித் தேவைகளுக்குத் தேவையான நீர்வளம் வலுப்பெறுவதுடன், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் த.ராஜகோபு, தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.