இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதன் மூலம், எமது ஆளுமையையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சூர்ய நிறுவகத்தின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை முற்பகல் சுதுமலை குபேரமஹால் மண்டபத்தில் நடைபெற்றது. சூர்ய நிறுவகத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் தேவராசா பிரேமராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், ஒரு மொழியை மட்டும் கற்பதோடு நின்றுவிடாமல், பல மொழிகளைக் கற்றுக்கொள்வது எமது ஆற்றலைப் பலப்படுத்துவதற்கு உதவும். கடந்த காலங்களில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலைகள் காரணமாக நாம் சிங்கள மொழியைக் கற்கத் தவறியதால், பல சந்தர்ப்பங்களில் வேலைவாய்ப்புகளையும் ஏனைய நன்மைகளையும் இழந்துள்ளோம். தற்போது அதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில், இவ்வாறான கற்கைநெறிகளைப் பயன்படுத்தி இரண்டாம் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். இது எமது தொடர்பாடல்களை வலுப்படுத்துவதுடன், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று தைரியமாகப் பணியாற்றுவதற்கான தன்னம்பிக்கையை வழங்கும், எனத் தெரிவித்தார்.

‘இன்று நான்கு பயிற்சி மையங்களினூடாகப் பயிற்சி பெற்ற 400 மாணவர்கள் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். ‘ஒரு அரச திணைக்களத்துக்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இரண்டாவது மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் அவசியமானதாகும். அத்துடன், அதனோடு ஆங்கில மொழியையும் இணைத்துக் கற்றுக்கொண்டால் எமது மாணவர்கள் எங்கும் சென்று வர முடியும். வடக்கு மாகாண இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் இவ்வாறான சிறந்த கல்விச் சேவையைத் தொடர்ச்சியாக வழங்கி வரும் சூர்ய நிறுவகம் மற்றும் அதன் ஸ்தாபகர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சூர்ய நிறுவகத்தின் நிறுவனரும் முன்னாள் நாடாளுமன்றச் சபாநாயகருமான கௌரவ கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சரும் சப்பிரகமுவா மாகாண முன்னாள் ஆளுநருமான கௌரவ நவின் திசாநாயக்க, சூர்ய நிறுவகத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி லங்கா ஜயசூரிய திசாநாயக்க, முன்னாள் பிரதமரின் மேலதிக செயலாளர் கலாநிதி மஹிந்த மொறகொல்ல மற்றும் அரச அதிகாரிகள், சூர்ய நிறுவகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.