ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியவாறு அதனை வளர்த்துக் கொள்வதற்கு இத்தகைய பண்பாட்டு விழாக்கள் பெரிதும் உதவுகின்றன. இளையோரைப் பண்பாட்டுச் செயற்பாடுகளுக்குள் ஈர்த்துக் கொள்வதன் ஊடாக, அவற்றை எதிர்காலத்திலும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2026 இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு பல்வகைமையையும் பாரம்பரியக் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, காலையிலேயே யாழ்ப்பாணம் முற்றவெளி சுற்றுவட்டாரத்திலிருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணியுடன் தொடங்கியது. பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்வுகளை வெளிப்படுத்திய 32 பண்பாட்டு நடனக் குழுக்களும் 22 பண்பாட்டு ஊர்திகளும் விருந்தினர்களுடன் யாழ்ப்பாண நகர வீதிகளூடாக அணிவகுத்து திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை சென்றடைந்தன. காலை 10 மணியளவில் அங்கு பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைப் பின்பற்றும் மக்களின் பண்பாடுகளையும் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பண்பாட்டு நடனங்கள் இடம்பெற்றன. தத்தமது தனித்துவமான பண்பாடுகளைப் பாதுகாத்தவாறு வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து தமது கலை மரபுகளை வெளிப்படுத்தியமை நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இங்கு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து இனங்களையும், மதங்களையும், மொழிகளையும் பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஒவ்வொருவரும் எந்தவொரு வேறுபாடுமின்றி தமக்குரித்தான பண்பாட்டை மதித்து, அதனைப் பேணியவாறு பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிகழ்வு இளையோரை கலைத்துறைக்கு ஊக்குவிப்பதையும், கலைகளுக்காக மூத்த தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல இளம் கலைஞர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் கலைகளை வளர்ப்பதற்கும் வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கு கடந்த ஆண்டும் பெறுமதியான இசைக்கருவிகளை வழங்கியிருந்தோம். இந்த உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும். கலைஞர்களையும் கலைமன்றங்களையும் தொடர்ச்சியாக ஊக்குவிக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
இன்றைய காலகட்டத்தில் பல பாரம்பரியக் கலைகள் அருகிவரும் நிலை காணப்படுகிறது. அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எமது பொறுப்பாகும். அதேவேளை, இளையோரை நல்வழிப்படுத்துவதில் கலையும் விளையாட்டும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, இந்த இரு துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்கான ஒரு சிறந்த களமாக இத்தகைய பண்பாட்டு விழாக்கள் அமைந்துள்ளன, என்றார் ஆளுநர்.
பண்பாட்டு விழாவின் ஒரு பகுதியாக வடந்தை நூல் வெளியீடு, கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் பல்வேறு பண்பாட்டு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும், கலைத்துறையைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் விருதுகள் மற்றும் கௌரவிப்புகள் வழங்கப்பட்டதுடன், இளம் கலைஞர்களின் பங்கேற்பும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2026 இற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதியமைச்சரும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் திருமதி நி.தர்சினி உள்ளிட்ட அதிகாரிகள், கலைஞர்கள், கலைமன்றங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.











