வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்கும் நடவடிக்கைக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், அதற்கான வரைவை ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான தொடர் கலந்துரையாடல் இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, பணியகத்தை உருவாக்குவதற்கான தற்போதைய வரைவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனை மேலும் செம்மைப்படுத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, வடக்கு மாகாணத்துக்குப் பொருத்தமான நூலக சேவைகள் பணியகத்துக்கான கட்டமைப்பு, செயற்பாட்டு முறை மற்றும் தேவையான ஒழுங்குகள் தொடர்பில் ஆராய்ந்து, இரண்டு மாதங்களுக்குள் தனது பணிகளை நிறைவு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உருவாக்கப்பட்டுள்ள நூலக சேவைகள் பணியகங்களுக்குரிய நியதிச் சட்டங்களும் விரிவாக ஆராயப்பட்டன. அவற்றில் பின்பற்றப்பட்டுள்ள நிர்வாக மற்றும் செயற்பாட்டு ஏற்பாடுகளைப் பரிசீலித்து, வடக்கு மாகாணத்தின் தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் உரிய ஏற்பாடுகளை உள்ளடக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்கும் யோசனை தொடர்பாக, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பிரதிநிதிகளால் வடக்கு மாகாணத்தில் மாகாண மட்ட நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதன் அவசியம் தொடர்பில் ஆளுநரிடம் சில மாதங்களுக்கு முன்னர் எடுத்துரைக்கப்பட்டது. இலங்கையின் சில மாகாணங்களில் இவ்வாறான பணியகங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருவதுடன், அவற்றின் கீழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களிலும் நூலக சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் அப்போது விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இன்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர் – தலைமைப்பீடம், யாழ்ப்பாணம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நூலகம் பவுண்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகர் மற்றும் வவுனியா பல்கலைக்கழக நூலகர் ஆகியோர் பங்கேற்றனர்.