“புதிய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளில் சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனத்தை முதலில் வழங்கியது வடக்கு மாகாண சபை” – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனத்தை முதலில் வழங்கியது வடக்கு மாகாண சபையாகும். இதற்காக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் பாராட்டுகின்றேன் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் திவ்ய மகாலில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டதையடுத்து, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராசா அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உரையாற்றினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், புதிய அரசாங்கம் அமைந்ததன் தொடர்ச்சியாக தேவையான அனுமதிகள் படிப்படியாகப் பெறப்பட்டதன் மூலம் இவ்வாறான ஆட்சேர்ப்பை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்த ஆளுநர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவின் ஊடாக தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டமைக்கும் நன்றி தெரிவித்தார்.

இம்முறை பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்த நிலையில், அவற்றிலிருந்து சுமார் 3,550 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதன் பின்னர் 300 பேர் மாகாண சுகாதார சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரச நியமனங்கள் தொடர்பில் பல்வேறு தலையீடுகள் மற்றும் கேள்விகள் எழுந்திருந்த சூழலில், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இம்முறை நியமனச் செயற்பாடு வெளிப்படைத்தன்மையுடனும் நியாயத்துடனும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று வழங்கப்படும் நியமனக் கடிதம் ஒரு வேலைக்கான கடிதம் மாத்திரமல்ல எனத் தெரிவித்த ஆளுநர், ஆயிரக்கணக்கானோரிடையே இருந்து கிடைத்துள்ள ஒரு பொறுப்பு என அதனைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாணத்தின் பல மருத்துவமனைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் புதிய நியமனதாரர்களின் பணி முக்கியமானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

நேரம் தவறாமல் கடமைக்கு வருதல், நோயாளிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை சேவையின் முக்கிய பொறுப்புகளாகும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விணைத்துக் கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்த சுகாதார அமைச்சர், பிரதமர் தலைமையிலான குழு, சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஆளுநர், புதிய நியமனங்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைக்கு கிடைத்துள்ள 350 புதிய மனிதவள ஆதரவாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையால் நேர்முகத் தேர்வு ஊடாக 300 பேருக்கும், மத்திய சுகாதார அமைச்சால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 50 பேருக்கும் நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், நிதி, நிர்வாகம் மற்றும் பொறியியலுக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மத்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.