மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ; ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு, கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் 77.3 மீற்றர் நீளமும் 34.3 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையவுள்ளது. தரைத்தளம் மற்றும் மேல்தளம் என இரு மட்டங்களைக் கொண்ட இக்கட்டடத்தின் ஒவ்வொரு தளத்தினதும் பரப்பளவு 2,651.4 சதுர மீற்றர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மொத்தம் 248 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

புதிய கட்டடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மன்னார் மாவட்ட பொது மருத்துமவனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு, விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

அடிக்கல் நடும் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்ட பின்னர் அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. அடிக்கல்லை மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், கௌரவ சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ; ஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நடுகை செய்தனர். இதனைத் தொடர்ந்து நினைவுப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர்கள், கௌரவ நகர சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.