மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்துச் சிரமத்துக்கு தீர்வு – கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் புதிய ஆற்றுச்சருக்கை திறந்து வைப்பு

ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில், வவுனியா மாவட்டத்தின் கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆற்றுச்சருக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோரால் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த இப்பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்ப்பெருக்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் 2.70 கிலோமீற்றர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 33.5 மீற்றர் நீளமும், ஒன்றரை அடி விட்டமும் கொண்ட 47 வரிசை நீர்வழிப் பாதை அமைப்பைக் கொண்ட ஆற்றுச்சருக்கை, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்திற்கான நிதி மாகாண சபை அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஆற்றுச்சருக்கை அமைக்கப்பட்டதன் மூலம், மழைக்காலங்களில் நீர்ப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்படும் மக்களின் போக்குவரத்துச் சிரமங்கள் குறைவதுடன், குறித்த வீதியைப் பயன்படுத்தும் பிரதேச மக்களுக்கு பாதுகாப்பானதும் தொடர்ச்சியானதுமான போக்குவரத்து வசதி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆற்றுச்சருக்கையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர், இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வீதிகளும் படிப்படியாகப் புனரமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

டித்வா பேரிடர் மற்றும் மத்திய கிழக்குப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலும், அபிவிருத்திப் பணிகள் எதுவும் கைவிடப்படாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் வீதிகள், ஆற்றுச்சருக்கைகள் மற்றும் பாலங்களை அமைப்பதில் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஆளுநர், திணைக்களத்தின் பணியாளர்களைப் பாராட்டினார்.

மேலும், மக்களின் தேவைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.