வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி

இன்று நாம் நடும் ஒவ்வொரு தென்னம்பிள்ளையும் ஒரு மரக்கன்றாக மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் எதிர்கால பொருளாதாரத்துக்கான முதலீடாகும். அவற்றைப் பாதுகாத்து, வளர்த்து, பயனடையச் செய்வது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் – தேசிய தென்னை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலை மற்றும் தென்னம்பிள்ளை வழங்கும் நிகழ்வு இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் ஆச்சி வரவேற்பு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்கு தென்னை முக்கோண வலய வேலைத்திட்டம் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னைப் பயிர்ச்செய்கை விரிவடைந்து வருவதாகவும், இது வடக்கின் விவசாயப் பொருளாதாரத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திட்டத்தின் இறுதி இலக்குகளை அடைவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வடக்கு மாகாண சபை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக, பொருத்தமான அரச காணிகளையும் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநர் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் வடக்கில் தென்னை உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, வெள்ளை ஈ தாக்கம், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் யானைகளால் ஏற்படும் சேதம் ஆகியவை வடக்கு மாகாணத்தின் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இவ்விடயங்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களுடன் இணைந்து பெறுமதிசேர் தென்னை உற்பத்தித் தொழில்கள் உருவாகும் போது, விவசாயிகளுக்கு அதிக வருமானமும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனத் தெரிவித்த ஆளுநர், அதன்மூலம் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தென்னை பயிர்ச்செய்கை ஊடாக அதிகளவான அந்நியச் செலவாணியை உழைத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 515 பயனாளிகளுக்கு மொத்தம் 22.7282 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு பயனாளிக்கும் ஒன்று முதல் ஐந்து வரையிலான தென்னம்பிள்ளைகளும் வழங்கப்பட்டன.

இதன்படி, 2025ஆம் ஆண்டு தென்னைப் பயிர்ச்செய்கைக்கான நீர்ப்பாசனப் பணிகளை நிறைவு செய்த 443 பயனாளிகளுக்கும், எல் நினோ காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் பசளை மானியத் திட்டத்தின் கீழ் 72 பயனாளிகளுக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கூட்டுறவு கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலர், தென்னை பயிர்ச் செய்கைச் சபையின் தலைவர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.