காலநிலை மாற்றம், உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் சந்தைச் சவால்கள் போன்ற காரணிகளால் வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில், கூட்டுறவு இயக்கத்தை மையப்படுத்திய புதிய செயற்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் விரிவான உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் உணவுப் பாதுகாப்பை நிலையான முறையில் வலுப்படுத்துதல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்தல் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலில் ஆழமாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடல், கூட்டுறவு வழிநடத்தும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கருத்துரு ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், காலநிலை மாற்றங்கள் காரணமாக வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை நடைமுறை அடிப்படையில் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இதன்போது, நேற்றையதினம் கூட்டுறவு உற்பத்திச் சங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட களப்பயணங்களின் அவதானிப்புகளும் முன்வைக்கப்பட்டன. பல கூட்டுறவு உற்பத்தியாளர்கள் தரமான உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சந்தைப்படுத்தல் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, கூட்டுறவு உற்பத்திப் பொருட்களுக்கு நவீன சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது, தயாரிப்புகளின் லேபிள்கள் மற்றும் பொதியிடல் ஆகியவற்றை நவீனமயப்படுத்துவது, நுகர்வோர் விருப்பங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் விரிவான சந்தை ஆய்வு மேற்கொள்வது ஆகியன அவசியமான நடவடிக்கைகளாகக் குறிப்பிடப்பட்டன.
இதற்காக பல்கலைக்கழகங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பீடங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாண கூட்டுறவுப் பொருட்களுக்கான விரிவான சந்தை ஆய்வொன்றை மேற்கொள்ளும் முன்மொழிவை மத்திய விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டுறவுச் சங்கங்களிடம் பயன்பாட்டில் இல்லாமல் காணப்படும் கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களை அடையாளம் கண்டு, அவற்றை உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மீளப் பயன்படுத்துவதற்கான முழுமையான செயற்திட்டமொன்றையும் மத்திய விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர்களை விவசாயத் துறையுடன் இணைக்கும் புதிய வேலைத்திட்டங்களும் விரிவாக ஆராயப்பட்டன. வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பயிற்சி நிலையங்களைப் பயன்படுத்தி, விவசாய இயந்திரங்களின் பயன்பாடு, பராமரிப்பு மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் தொடர்பாக இளைஞர்களுக்கு தொழில்முறைப் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் திறன் பெற்ற இளைஞர்களை உருவாக்குவது மட்டுமன்றி, அவர்களுக்கு புதிய வாழ்வாதார மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ஆளுநர் ஊடாக விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சிற்கு ஒருங்கிணைந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் விதை உற்பத்தியை விரிவுபடுத்துவதன் அவசியமும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. தரமான விதைகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதோடு, பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தை தரமான விதை உற்பத்தியின் முக்கிய மையமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.
அதேபோன்று, வடக்கு மாகாணத்தின் பாற்பண்ணைத் துறையை வலுப்படுத்துவதற்காக பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதோடு, செயற்கை முறையிலான சினைப்படுத்தல் சேவைகள், தரமான கால்நடை தீவனங்கள் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகளை பண்ணையாளர்களுக்கு விரிவாக வழங்குவதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்வித் துறையுடனான இணைப்பின் முக்கியத்துவத்தையும் கலந்துரையாடல் எடுத்துரைத்தது. வடக்கு மாகாணத்தில் பாடசாலை உணவுத் திட்டத்திற்குத் தேவையான மூலப்பொருட்களை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கும் முன்னோடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், தற்போதைய சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளிலும் கூட்டுறவு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பை உருவாக்குவதன் மூலம், கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிலையான உள்ளூர் சந்தையொன்றை உருவாக்க முடியும் என்பதும் குறிப்பிடப்பட்டது.
மேலும், சில பாடசாலைகளில் மதிய உணவுத் திட்டங்களில் முட்டை அல்லது இறைச்சி பயன்படுத்தப்படாத நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய, புரதச்சத்து நிறைந்த மாற்று உணவுப் பொருட்களை கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கும் சாத்தியங்களும் ஆராயப்பட்டன.
கூட்டுறவு இயக்கம் என்பது வெறும் வணிக அமைப்பாக இல்லாமல், உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாக இருப்பதை கருத்தில் கொண்டு, அரச நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தனியார் துறை மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தையும் கலந்துரையாடல் வலியுறுத்தியது.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர், அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரிகள், மாகாணப் பணிப்பாளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், மத்திய கல்வி, விவசாய அமைச்சு அதிகாரிகள், திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள், கூட்;டுறவுத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




