மாணவ, மாணவியர்களே,
நாளை (10.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பங்கேற்கவுள்ள வடக்கு மாகாணத்தின் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்ற பெருமையை அடைந்தது. அந்தச் சாதனை வெறுமனே ஒரு புள்ளிவிபரமல்ல, அது எமது மாணவர்களின் விடாமுயற்சிக்கும், பெற்றோரின் தியாகத்துக்கும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த ஆண்டும் அந்தப் பெருமையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான பொறுப்பு உங்களின் தோள்களில் இருக்கிறது. அந்தப் பொறுப்பைச் சுமையாக அல்ல, உங்களின் திறமையை உலகிற்கு நிரூபிக்கும் அரிய வாய்ப்பாகக் கருதுங்கள்.
பரீட்சை என்பது உங்கள் முழு வாழ்க்கையையும் தீர்மானிக்கும் இறுதி இலக்கு அல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான மிக முக்கியமான வாயிலாகும். எனவே பயத்துடனோ, பதற்றத்துடனோ அல்ல, தன்னம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்லுங்கள். கடந்த மாதங்களாக நீங்கள் மேற்கொண்ட உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். ஒவ்வொரு வினாவையும் நிதானமாக வாசித்து, தெரிந்ததைத் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் எழுதுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தின் கனவுகளை மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் நம்பிக்கையையும் சுமந்து செல்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொரு வெற்றியும் வடக்கு மாகாணத்தின் கல்விப் பெருமையை மேலும் உயர்த்தும்.
அன்பான பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவர்களின் வெற்றிக்காக அவர்கள் செய்துள்ள தியாகங்களும் அர்ப்பணிப்பும் அளப்பரியவை. இந்தப் பரீட்சைக் காலத்தில் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் மன அமைதியையும் வழங்கி, அவர்களுக்குத் துணையாக நிற்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மாணவர்களே,
உங்களால் முடியும். நீங்கள் அதற்காகவே உழைத்திருக்கிறீர்கள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். வடக்கு மாகாணத்தின் கல்விப் பாரம்பரியத்தை மேலும் உயர்த்துங்கள்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவ, மாணவியர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தங்களது வாழ்க்கை இலக்குகளை அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.
இதேவேளை இம்முறை பரீட்சைக்கு பாடசாலைப் பரீட்சார்த்திகள் 16,699 பேரும், தனியார் பரீட்சார்த்திகள் 3,180 பேருமாக 19,879 பேர் தோற்றுகின்றனர். 153 பரீட்சை நிலையங்களும், 50 இணைப்பு நிலையங்களும், 6 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
நா. வேதநாயகன்
வடக்கு மாகாண ஆளுநர்
