“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு யாழ். கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் “PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தனது உத்தியோகபூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தொடுகை பரிவர்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிடுகையில், ‘இன்றைய உலகம் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விளங்குகின்றது’ என்றார். மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, தூய்மையான இலங்கை மற்றும் டிஜிட்டலைசேசன் ஆகிய மூன்று தேசியக் கொள்கைகளையும் மக்களின் அன்றாட வாழ்வுடன் இணைக்கும் ஒரு முக்கியமான செயல்முறையாக இந்த நிகழ்வு அமைகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தாள்கால நாணய முறையிலிருந்து திரவ நாணயமல்லாத பணப்பரிவர்த்தனை முறைக்கு உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், உலகத்துடன் போட்டியிட்டு முன்னேற விரும்பும் நாடாகவும் மாகாணமாகவும் நாம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது வெறும் மாற்று வழிமுறை மட்டுமல்லாமல், வேகம், பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நவீன பொருளாதாரக் கட்டமைப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் குறைத்து வரி ஒழுங்கை வலுப்படுத்துவதன் மூலம் ‘தூய்மையான இலங்கை’ என்ற தேசியக் கொள்கையை அடைய இது பெரிதும் உதவும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு, வணிகர்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், சர்வதேச டிஜிட்டல் கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாவிகள் எந்தவிதப் பணப்பரிமாற்றச் சிரமமுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்கள இயக்குநர் வசந்த அளுவிஸ், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சிவகரன், இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சிப் பிராந்திய முகாமையாளர் திருமதி பாமினி செந்தில்மாறன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பன, மத்திய வங்கியின் உயரதிகாரிகள், அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.