சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

ஒரு பாடசாலையாக இருந்தாலும் சரி, வேறு எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்திலேயே முற்றிலுமாகத் தங்கியிருக்கின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் இன்று (25.07.2026) சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் ‘விக்ரோறிய வித்தகம்’ எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு நடனம், குழு இசை, ‘பதம்’ நடனம், சிங்களப் பாடல், ‘காலிங்க நர்த்தனம்’ நாட்டிய நாடகம் மற்றும் ‘துப்பல் பரிசு’ நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன. அத்துடன், மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு பிரதம விருந்தினர் உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

‘1876 ஆம் ஆண்டு வெறும் ஆரம்பப் பாடசாலையாக வித்திடப்பட்ட இந்த விக்ரோறியா கல்லூரி, நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆங்கிலக் கல்வியைக் கிராமப்புற மாணவர்களுக்கும் வழங்கி, வலிகாமம் மேற்கின் ஒளிவிளக்காக விளங்கிய பெருமைக்குரியதாகும். பல சிறந்த கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை இந்த நாட்டுக்கு ஈன்றெடுத்த புண்ணிய பூமி இது.

மிகச் சிறப்பாகச் செயற்படும் ஒரு பாடசாலைக்கு, பொருத்தமற்ற ஒரு அதிபர் வந்தால், குறுகிய காலத்திலேயே அந்தப் பாடசாலை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். அதேபோல, கீழ் நிலையில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு, சிறந்த தூரநோக்குடைய அதிபர் கிடைத்தால், அந்தப் பாடசாலை குறுகிய காலத்திலேயே வளர்ச்சியின் உச்சிக்குச் செல்லும். உங்கள் பாடசாலையின் தற்போதைய அதிபர் ஒரு சிறந்த தலைமையாக இருந்து, இந்தப் பாடசாலையை இன்னும் பல மைல்கற்களை நோக்கி முன்னோக்கிக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மாணவர்கள் எந்த நேரமும் ‘படி… படி…’ என ஓடித்திரிந்து, புத்தகப் பூச்சிகளாக அறைக்குள் முடங்கிக் கிடக்கக் கூடாது. தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை உங்களை அவ்வாறானதொரு சூழலுக்குள் தள்ளியிருந்தாலும், இந்த நிலை மாறப்போகின்றது. அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம், தற்கால உலகுக்கு ஏற்றவாறு தொழில்முறைக் கல்வியையும், நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உங்களுக்குப் போதிக்கும்.

ஒரு காலத்தில் உதைபந்தாட்டத்திலும், ஹொக்கியிலும், மெய்வல்லுநர் போட்டிகளிலும் விக்ரோறியா கல்லூரி எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கி, பல சம்பியன் கிண்ணங்களைத் தமதாக்கிய பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்தப் பொற்காலத்தை நீங்கள் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். கல்விக்கு மேலதிகமாக இணைபாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவது, தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவத்தையும், தலைமைத்துவப் பண்பையும் இயல்பாகவே வளர்த்துவிடும்.

எமது அரச கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு தலைமைத்துவப் பண்போ, மனிதநேயமோ போதுமானளவு இல்லை. ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கிணங்க, கற்ற படிப்பிற்கு ஏற்றவாறு நல்ல பண்புகளுடன் வாழ வேண்டும். எதிர்காலத்தில் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி, செயற்கை நுண்ணறிவும் கணினிகளும் உலகை ஆண்டாலும், அதனை இயக்கும் உங்களுக்கு இரக்கமும் தலைமைத்துவப் பண்பும் இருந்தால்தான், நீங்கள் பெறும் பதவிகளால் எமது மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும், என ஆளுநர் தனது உரையில் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக விக்ரோறியன் ச.முருகவேல், விக்ரோறியன் இரா.ஸ்ரீரங்கன், விக்ரோறியன் ந.சிவரூபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய அதிபர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.