வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சபையின் வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவாக்கிக் கொள்ள முடியும் எனவும், எனவே வருவாய் ஈட்டக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் தமக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆளுநர் தனது ஆரம்ப உரையில் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் ஊடாக வருவாயைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்துவதில் சில சவால்கள் நிலவுகின்றன. சில இடங்களில் மாகாணத்துக்குச் சேரவேண்டிய வருவாய் இழக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த காலங்களில் தவறான நடைமுறையொன்று தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டிருந்தால், அது சரி என்ற அடிப்படையில் அதனையே தொடர்ந்தும் முன்னெடுக்க முனையக் கூடாது. அந்தத் தவறுகளைத் திருத்தி, சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதனூடாகவே மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாக, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) நிதியை மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பெற்றுக்கொள்வதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்கள், மாகாணம் மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைக்கு எதிர்பார்க்கப்படும் வருவாய் தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை முறையாகக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மாகாண இறைவரித் திணைக்களத்தின் விளக்கமளிப்பின்போது, மாகாண சபைகள் நிரலின் கீழ் அறவிடப்படும் வருமான மூலங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, உள்ளூர் மதுபானத் தவறணை வாடகை, நீதிமன்ற ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வைகள், கனிமப் பொருட்கள் மீதான வரிகள், அடகு பிடிப்போருக்கான கட்டணங்கள் மற்றும் வியாபாரப் பெயர் பதிவுக்கான கட்டணங்கள் ஆகியவற்றினூடாகக் கிடைக்கும் வருமானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மாகாணக் காணித் திணைக்களத்தினூடாகப் பெறப்படும் நீண்டகாலக் குத்தகை மற்றும் வருடாந்த அனுமதிப்பத்திர வருமானங்கள் குறித்தும் இதன்போது ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் நிலவும் தாமதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் மாகாணக் காணி ஆணையாளரால் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்களுக்கான விலைமதிப்பீட்டுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் சபைகளின் வருமானம் அதிகரிக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், குடிபுகு சான்றிதழ் பெறுவது அவசியமாக்கப்பட்டு வருவதால் வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதேவேளை, மாகாண சபையால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்களுக்கு அமைவான ஒழுங்குமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையால் ஏற்படும் வருமான இழப்புகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஏனைய திணைக்களங்களும் தங்களுக்கான புதிய வருமான மூலங்களை அடையாளங்காண்பது தொடர்பிலும், அவற்றை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. திணைக்களங்களின் வழமையான வருவாய் ஈட்டலுக்கு மேலதிகமாக, மாகாணத்துக்கான மேலதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுத் திட்டத்தை மேலும் விரிவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல் மற்றும் நிதி), மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.