வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் கொண்டாடும் ஹஜ் பெருநாளான ‘ஈதுல் அழ்ஹா’ திருநாளை முன்னிட்டு, வட மாகாண முஸ்லிம் சமூகத்தினருக்கும் என்னுடைய அன்பான, மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹஜ் பெருநாளானது, இப்ராஹீம் நபி அவர்களது உன்னத தியாகத்தையும், அசைக்க முடியாத இறைநம்பிக்கையையும் நினைவுகூரும் மிகவும் புனிதமான, ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகும். தமக்குச் சொந்தமான அனைத்தையும் இறைவனின் விருப்பத்துக்காக அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

வட மாகாணம், பல்லின, பல்மத மக்கள் ஒன்றிணைந்து வாழும் பூமியாகும். இந்த அன்பான மண்ணில், ஹஜ் பெருநாளின் செய்தியான சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம் மற்றும் சமாதானம் ஆகிய மதிப்புமிக்க கொள்கைகளை நாம் அனைவரும் ஒன்றாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தியானது, சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் வளர்க்கும் ஒரு உன்னதமான வழிகாட்டியாக அமைகின்றது. இப்பெருநாளில் ஏழை எளியோருக்கு உதவி, வறியவர்களுக்கு உணவளித்து, அனைவரும் இணைந்து மகிழ்வாகக் கொண்டாட வேண்டும் என வேண்டுகிறேன்.

வட மாகாணம் போர்க்காலத்திலிருந்து மீண்டு, சமாதானமான, வளமான, அபிவிருத்தியடைந்த மாகாணமாகக் கட்டியெழுப்பும் பயணத்தில், இம்மாகாண மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வது இன்றியமையாதது. ஹஜ் பெருநாளின் மதிப்பீடுகளே இந்த ஒற்றுமைக்கு வழிகாட்டும் ஒளியாக அமையும்.

இந்த ஹஜ் பெருநாளானது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், சுபீட்சமும், ஆசீர்வாதமும் நிறைந்ததொரு நன்னாளாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

ஈத் முபாரக்!