எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்:
இன்றைய நிகழ்வில் பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஏனையோரையும் இவ்வாறான சாதனையாளர்களாக மாற்றத் தூண்டும் ஒரு சிறந்த முன்மாதிரி நிகழ்வாகவும் இது அமைகின்றது. சகல வசதிகளும் வாய்ப்புக்களும் இருப்பவர்கள் சாதிப்பது சமூகத்தில் பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், வறுமை நிலையில் இருந்து, வாய்ப்புக்களுக்காக ஏங்கி, பல இடங்களில் ஒதுக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் சாதிக்கும்போது, அது உண்மையான சாதனையாகத் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும்.
நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், அது எமக்கும் நன்மையாகவே திரும்பக் கிடைக்கும் என்பது இயற்கையின் நியதியாகும். அதேபோல, தீமை செய்தால் அது எம்மையும் திருப்பித் தாக்கும். இன்று சிலர் தவறான வழிகளில் பணத்தைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வதைப் போலத் தோன்றினாலும், என்றாவது ஒருநாள் அவர்கள் அந்தத் தவறுக்காகக் கட்டாயம் வருந்தும் நிலைமை ஏற்படும்.
இன்றைய இந்தப் பெண் சாதனையாளர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் பலருக்கும் ஒரு சிறந்த படிப்பினையாகும். கஷ;டங்கள் வரும்போது நாம் தளர்ந்துவிடக் கூடாது என்பதற்கும், தடைகளைக் கண்டு நாம் எடுத்த முயற்சிகளைக் கைவிட நினைக்கும்போதும், இந்தச் சாதனையாளர்களின் கதைகள் எமக்கு நல்லதொரு உந்துசக்தியாக அமையும். கஷ;டங்களைக் கண்டு நாம் கலங்கினால், காணாமல் போய்விடுவோம். இன்றைய இளம் சமூகத்தினர் இவர்களிடமிருந்து நிச்சயம் இந்தப் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் விரக்தியடைந்திருப்பவர்கள் கூட இவர்களின் சாதனைப் பயணங்களைக் கேட்டால் மீண்டும் வீறுகொண்டு எழுவார்கள்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள், மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஒரு நேர்மையான அதிகாரியாவார். அவரின் இத்தகைய விருது வழங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் எதிர்காலப் போக்கை நிச்சயம் நல்வழியில் மாற்றியமைக்கும் என நம்புகின்றேன், என்றார்.
இந்நிகழ்வில், பெண்களின் தலைமைத்துவம், தொழில்முனைவு, சமூக சேவை, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு சிறந்த பெண்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் ‘அரியாத்தை விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், தொழில்முனைவில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் 16 பெண்களுக்கு ‘அரியாத்தை ஞாபகார்த்தப் பாராட்டுச் சான்றிதழ்கள்’ வழங்கப்பட்டன.
மேலும், அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவிகள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தலா 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வாழ்நாள் சாதனையாளர் திருமதி எஸ்.அகிலத்திருநாயகி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், மாவட்டச் செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சாதனைப் பெண்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.




