தேசிய மட்டத்தில் சாதிக்கும் வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ விருது வழங்கலின் போது வழங்கப்படும் பரிசுத் தொகையில், குழு விளையாட்டுக்களுக்கான தொகையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், பரிசுத் தொகை மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார்.
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.05.2026) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண இரவு நிகழ்வை, நாம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தோம். இதன்போது வீரர்களுக்கான பரிசுத் தொகை தொடர்பில் சில அதிருப்திகள் நிலவியதை நான் அறிவேன். அதனால்தான், அடுத்த தேசிய மட்டப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி ஒரு சுமூகமான தீர்மானம் எடுக்கப்படும் என அந்த நிகழ்விலேயே நான் உறுதியளித்திருந்தேன். அதற்கமைவாகவே இன்றைய இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு விளையாட்டு வீரரினதும் அர்ப்பணிப்பையோ, அங்கீகாரத்தையோ பணத்தால் ஈடு செய்துவிட முடியாது. ஆனால், அவர்களை மென்மேலும் ஊக்குவிப்பதற்கான பொருத்தமான ஊக்குவிப்புத் தொகையை எம்மால் வழங்க முடியும். பல திறமையான வீர வீராங்கனைகள் குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக விளையாட்டுக்களில் முழுமையாகப் பங்கேற்க முடியாத நிலைமை காணப்படுவதையும் நான் நன்கு அறிவேன். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கான பரிசுத் தொகை தொடர்பில் நாம் ஒருமித்த கலந்துரையாடல்கள் ஊடாகச் சிறந்ததொரு தீர்வை எட்ட முடியும் என உறுதியாக நம்புகின்றேன், எனத் தெரிவித்தார்.
தனிநபர் விளையாட்டு நிகழ்வுகளில் தங்கப் பதக்கம் பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்குச் சமனான தொகையை, குழு நிகழ்வுகளில் வெற்றிபெறும் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்குவது நடைமுறைச் சவாலானது என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. எவ்வாறாயினும், குழு விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசுத் தொகையைப் கணிசமாக அதிகரிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை மற்றும் வீரர்களுக்கான ஊட்டச்சத்துக் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர் அவர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் பிரதிநிதி ஒருவரையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றை உடனடியாக அமைக்குமாறு பணித்தார். இக்குழுவானது பரிசுத்தொகை, பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு, ஊட்டச்சத்துக் கொடுப்பனவு மற்றும் அது தொடர்பான விடயங்களை விரிவாக ஆராய்ந்து தகுந்த பரிந்துரைகளை முன்வைக்கும்.
மேலும், விளையாட்டுத்துறையில் முழுமையாக ஈடுபடுவோரின் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பான தேசியக் கொள்கை சார்ந்த விடயங்கள் குறித்தும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுசென்று உரிய கோரிக்கைகளை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதாகவும் ஆளுநர் இதன்போது உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.





