வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (22.04.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இவ்வாண்டு முக்கிய அபிவிருத்திப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சில திட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய பணிகள் மதிப்பீடு மற்றும் கேள்விமனு கோரல் கட்டங்களில் உள்ளன. குறிப்பாக, உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ‘ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீனமயப்படுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.

மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஊடாக 284 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 38 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிராமிய சித்த மருத்துவமனைகளைப் புனரமைத்தல், மூலிகைத் தோட்டங்களை அமைத்தல் மற்றும் மருத்துவமனை உபகரணங்களை கொள்வனவு செய்தல் போன்ற பணிகள் இதில் உள்ளடங்குகின்றன.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த கௌரவ ஆளுநர் அவர்கள், நிதி ஒதுக்கீடுகளை உரிய காலப்பகுதிக்குள் வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு நிலைகளில் நிலவும் தாமதங்களைத் தவிர்த்து, மக்களுக்கான சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும் தற்போதைய விலை அதிகரிப்புக்கு அமைவான மீள் மதிப்பீடுகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

இந்தத் துறைசார் மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர், நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள ஆணையாளர், மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.