இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (02.04.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க அவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மிகச் சிறந்த சாதனையுடன் முதலிடம் பெற்றமைக்காக ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண நிர்வாகத்துக்குத் தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காலதாமதமாவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பிலும், அவற்றை விரைந்து நிறைவு செய்வதற்கான கோரிக்கைகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் இதன்போது முன்வைக்கப்பட்டன. விசாரணைகளை விரைந்து முடிப்பதில் உள்ள நிர்வாக ரீதியான இடர்கள் தொடர்பில் விளக்கமளித்த கல்வி அமைச்சின் செயலாளர், அவற்றை இயலுமானவரை துரிதமாக நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆசிரியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளில் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் நிலவும் தாமதங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கைகளை உருவாக்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டு பிரதம செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தொழிற்சங்கங்களை அழைத்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அதன் பின்னர் இறுதி செய்யப்படும் இடமாற்றக் கொள்கை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, அதிபர் இடமாற்றக் கொள்கையானது தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்டு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட இடமாற்றக் கொள்கை தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் மற்றும் வடக்கின் அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





